பயணம்- இது பட விமர்சனம் இல்லீங்கோ









பயணம்- இந்த வார்த்தை என்னைப் பொறுத்தவரை மந்திரச் சொல். ஒவ்வொரு நாளும் நம்மை நமது உலகை புதுப்பிக்கவல்ல ஒரு மந்திரச்சொல் தாங்க அது. சற்று யோசிச்சு பாருங்க, வாழ்க்கை தான் எவ்வளவு விசித்திரமானது? அழுதுகொண்டே பிறப்பதிலிருந்து இறந்து பிறரை அழவைப்பது வரை. இங்கே கொஞ்சம் கவனித்தீர்களா? நமது வாழ்வின் விசித்திரம் நாம் பிறக்கையிலே நம்முடன் தொடங்கிவிடுவதை. ஆம் நாம் பிறக்கும் போதே அழுது கொண்டு பிறந்தால் தான் நம்மைப் பெற்ற தாயின் முகம் மலர்கின்றது. அந்த அழுகைச் சத்தம் தான் பிரசவ வார்டின் வெளியே சிந்தனையுடன் நடந்து கொண்டிருக்கிற தகப்பனால் ஒரு நல்ல முடிவை தெரிந்து கொள்ள உதவுகின்றது. ஆனால் அரிதாக ஒரு சில தருணங்களில் அப்படி அழாமல் குழந்தை பிறக்கும் போது தகப்பனின் அந்த நொடியை சற்று சிந்தித்து பாருங்கள்.அழாமல் பிறந்த குழந்தை என்றால் அநேகமாக அது பிறக்கும் போதே இறக்கின்ற குழந்தையாக தான் பெரும்பாலும் இருக்கும்.


அதே சமயம் அதற்கு நேர்மாறாக ஒரு மனிதன்  இறக்கின்ற போது பாருங்கள்...அவன் சிரித்துக் கொண்டே இறந்தாலும் கூட அவனை சுற்றியுள்ள மனிதர்களுக்கு அவனது திடீர் பிரிவு அழுகையும் சோகத்தையுமே உண்டாகுகிறது. எனவே பிறக்கும் போதே நமது இறப்பும் நிச்சயம் ஆகிவிட்ட இந்த நிச்சயமற்ற வாழ்க்கையிலேயே நம்மை ஒவ்வொரு நொடிப்பொழுதும் ஒரு தூண்டுகோலாக பிடிப்புடன் கொண்டு செல்லுவது தான் பயணம்...வாழ்க்கைப் பயணம். அதைப் பற்றிய எண்ணங்கள் தான் இந்த இடுகை.

ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் பிரச்சினை இருக்கும். அவன் பிறந்த,வளர்ந்த சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு அதை பிரிக்கலாம். ஆனால் உண்மையிலேயே சொல்லப் போனால் பிரச்சினை என்றே ஒன்று கிடையாது.நாம் செய்கின்ற காரியத்தால் நம்மால் உருவாக்கப் படுகின்றவையே பிரச்சினைகள். ஏழைகளுக்கு அன்றாட வாழ்க்கையே ஒரு பிரச்சினை தான்.அவனுக்கு தேவை எல்லாம் பசி தீர்க்க உணவு, இருக்க இடம், உடம்பை மறைக்க மானத்தை காக்க இரண்டு செட் உடை, அவ்ளோ தான். இதுவே வசதி உள்ளவனுக்கு அனைத்துமே கவுரவம் சார்ந்த விஷயங்கள் ஆகிவிடுகின்றது.உண்ணும் உணவிலிருந்து உடுத்தும் உடை வரை அவன் மேன்மையானவற்றைத் தேடி அலைகின்றான். இதில் இருதலைக் கொள்ளி எறும்பாக தவிப்பது நடுத்தர வர்க்கத்தினர் தான்.

இப்படிப் பட்ட வாழ்க்கையில் பயணிப்பதே ஒரு சுவாரசியமான விஷயம் தான். பயணங்களின் மூலம் தான் நம் மனம் பக்குவப் படுகின்றது. பயணத்தைப் போல ஒரு உற்ற தோழன் யாரும் கிடையாது. பயணத்தின் போது நம் கூடவே இன்னொரு உயிரும் கை கோர்த்து கொள்ளும் போது தான் நாம் இன்னும் பக்குவம் அடைகின்றோம். அந்த இன்னொரு உயிர் பெரும்பாலும் மனைவியாகவோ அல்லது நண்பர்களாகவோ இருக்கும்.

தனியே பயணிப்பது தான் எனக்கு மிகவும் பிடித்த விஷயம்.நம்மில் தொலைந்து போன, நாம் தொலைத்த விஷயங்களை மீட்டெடுக்க என்னால் பயணிப்பதன் மூலமே முடிகின்றது. அடுத்த நாள் வாழ வேண்டும் என்ற புத்துணர்ச்சியை கொடுக்கின்றது. மிக முக்கியமாக நம்மைப் பற்றி நன்றாக புரிந்து கொள்ள உதவுகின்றது தனிமைப் பயணம். அது நமது பலம்,பலவீனங்களை எடை போட, சோதித்து கொள்ள உதவி செய்கின்றது.

நான் என்னை பக்குவ படுத்திக் கொள்ள பலமுறை சேலம் - சென்னை வழிகளான உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலையும், வேலூர் நெடுஞ்சாலையும் உபயோகப் படுத்தி இருக்கிறேன்.

அனைவரும் மன்னிக்கவும் இப்போ கொஞ்சம் சுயபுராணம் பாட வேண்டியிருக்கிறது. நான் அவ்வாறு பயணம் மேற்கொண்ட தருணம், காதல் தோல்வியாலும், குடும்ப சச்சரவுகளாலும் மிகவும் துவண்டு போய் என்னை நானே தேடிக் கொண்டிருந்த சமயம். பத்துக்கு எட்டு அறையில் தனியாக சென்னையில் வாழ்க்கை. என்ன ஏது என்று கேட்க கூட யாரும் அருகில் இல்லாத சுதந்திரம். ஆலோசனை சொல்லவோ தேற்றவோ அருகில் யாரும் கிடையாது. அப்போது கூட எனக்கு கை கொடுத்தது எனது பைக்கும் நான் மேற்கொண்ட பயணங்களும் தான். பைத்தியம் போல பல இடங்களுக்கு பைக்கிலேயே நெடுந்தூரம் பயணித்து இருக்கிறேன். பெரும்பாலும் அவற்றுள் எங்கு போகிறோம் எதற்கு போகிறோம் என்ற  இலக்கில்லாத பயணங்கள்.இப்போது பதிவுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கவுதம் மேனன் இயக்கிய வாரணம் ஆயிரம் படத்தில் கூட அப்படி ஒரு காட்சி வரும். 

அப்படிப்பட்ட பயணங்களில் தான் எத்தனை சுவாரசியங்களை நான் கண்டிருக்கிறேன். போகும் வழியெங்கும் வாழ்க்கையின் இரண்டே சாரர்களை பார்க்கலாம். ஒன்று மகிழ்ச்சியாக பயணிப்பவர்கள். மற்றவர்கள் முகத்தில் ஏதோவொரு சோகத்தை அப்பிக் கொண்டு பயணித்துக் கொண்டிருப்பார்கள். நான் மட்டும் எந்த பிரிவையும் சாராமல் போய்க்கொண்டிருப்பேன். அதனால் தான் என்னவோ என்னால் பல அறிய விஷயங்களை புரிந்து கொள்ள முடிந்தது என்று நினைக்கிறேன்.
ரோட்டுக்கடை, பரோட்டா லாரி டிரைவர்கள், இருசாரார் மனிதர்களின் இரவு வாழ்க்கை, விபத்து, நசுங்கிய வாகனங்கள்,ரத்த வாடை,சாவு,அதைப் பார்த்துக் கொண்டே தொடரும் பயணம், அதீத தூசு, புகை, இயற்கை சீற்றங்கள் (ஒரு முறை ஊத்தங்கரை அருகே நான் செல்லும் போது அடித்த மழையிலும்,காற்றிலும் எனக்கு பத்தடிக்கு முன்னே மரம் சரிந்து விழுந்தது. அப்போது உணர்ந்தது எல்லாம் இந்த இயற்கையின் முன்னே ஒரு தூசி தான் நான் என்று), சகிப்புத்தன்மை,பல புதிய முகங்களின் நட்பு,அவர்களின் அனுபவங்கள் -  இப்படி பல விஷயங்களை அடுக்கி கொண்டே போகலாம். என்ன தான் நாம் காரிலோ, பஸ்சிலோ பயணம் செய்தாலும் தனியே இவ்வாறு பைக்கிலே பயணம் செய்வது என்பது என்னைப் பொறுத்தவரை தனிமையை தேடி அலைபவர்களுக்கும், தன்னை தேடி அலைபவர்களுக்கும் மிகவும் பொக்கிஷமானது தான்.

தளபதி படத்தில் ஒரு வசனம் வரும், " எனக்கு சோறு போட்ட இங்க இருக்குற அத்தனை பேரும் என் அம்மா தான்" என்று. அதை நான் இந்த பயணங்களின்        போது உணர்ந்து இருக்கிறேன். 

அடுத்து கூட்டுப் பயணம். இது தனிமை விரும்பிகளுக்கு பிடிக்காது என்றாலும், அவர்கள் இந்த பயணத்துக்கு ஏற்ப தன்னை அட்ஜஸ்ட் செய்து கொள்ள வல்லவர்கள். இதில் பெரும்பாலும் நாம் குழு மனப்பான்மையையும், அடுத்தவரின் விருப்பு வெறுப்புகளுக்கு மரியாதையை கொடுப்பதையும், கருத்துப் பரிமாற்றத்தையும், அதீத சகிப்புத்தன்மையையும், அடுத்தவரின் எண்ணங்களுக்கு மதிப்பளிப்பதையும் கற்றுக் கொள்ளலாம். குறிப்பாக நம்மை நம்பி இன்னும் சில ஜீவன்கள் இருக்கின்றது என்ற நினைப்பே நமக்கு பாதுகாப்பு உணர்வை அதிகப் படுத்தி ஒழுங்காக வாகனத்தை ஓட்ட வைக்கும்.

ஒரு பயணம் ஒரு மனிதனின் மனதை எப்படி எல்லாம் மாற்றும், பக்குவப் படுத்தும், அவன் பழகிய மனிதர்களின் குணங்களை பிரதிபலிக்க வைக்கும் என்பதற்கு அன்பே சிவம் படத்தில் வரும் கமல்-மாதவன் ஒரிசா-சென்னை பயணங்கள் உதாரணம். எனக்கும் ஒரிசா அனுபவம் உண்டு. அது ஒரு பெரிய பழைய கதை. ஏற்கனவே எனது பழைய வலைப்பூவில் எழுதி இருந்தேன். மீண்டும் நேரம் வரும் போது சொல்கிறேன்.இப்படிப் பட்ட பல நல்லது தரும் பயணத்தை நாம் பணம் செலவழிகின்றது என்று பாராமல் அடிக்கடி செய்வோம்.நம்மை நாமே புதுபிப்போம். பொறுமையுடன் படித்த அனைவருக்கும் நன்றி!!!

0 ரீலு ஓடிருக்கு..:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
 
டக்கால்டி © 2010