"ரெண்டு குவார்ட்டர் நெப்போலியன்...ஒரு சென்னா மசாலா...அரை பாக்கெட் கிங்க்ஸ்...ஒரு அரை லிட்டர் கோக்... மூணு பாக்கெட் தண்ணி கொடுங்க..."
"வேற எதாவது வேணுமா சார்?"
"ஹலோ நாம வழக்கமா சொல்றத சொல்லிட்டேன் மச்சி? அவ்ளோ தான...வேறெதுவும் வேணாமில்ல...சரி நீ சீக்கிரம் வாடா..மேட்ச் ஸ்டார்ட் ஆகப் போகுது.ஓகே பை... ஓகே பாஸ். இப்போதைக்கு இது போதும். சாப்பிட்டு சொல்றோம். முதல்ல இதை கொஞ்சம் வேகமா கொண்டு வாங்க." சட்டையின் மேல் ரெண்டு பட்டனை கழட்டி காலரை சற்று மேல் தூக்கி விட்டு தாடியை தடவிக்கொண்டே வேளச்சேரி ரூப் டாப் டாஸ்மாக் சாரில் ரிலாக்சாக சாய்ந்து பெருமூச்சு விட்ட படி காத்திருந்தான் ராம்.
இன்னும் பத்து நிமிடத்தில் இந்தியா-பாகிஸ்தான் உலகக்கோப்பை காலிறுதி கிரிக்கெட் போட்டி. அதை டாஸ்மாக்கில் தண்ணி அடித்துக் கொண்டே குடிமகன்களின் கும்மாளத்துடன் பார்த்து கொண்டாடுவது என்று முடிவு செய்து இருந்தனர் ராமும் அவனது நண்பன் லெனினும்.லெனின் வருகைக்காக தான் காத்திருக்கிறான் ராம். லெனினும் ராமும் ஒன்றாகப் படித்தவர்கள் இல்லை. ராமின் பள்ளி நண்பனின் கல்லூரி நண்பன் ஆனதால் லெனினும் ராமின் நண்பன் ஆகிப் போனான். சொல்லப் போனால் இருவருமே சில நாட்களிலேயே தமக்குள் பல கருத்துக்கள் ஒத்து போவதை உணர்ந்து நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டனர்.
"வணக்கம் மச்சி...சாரி கொஞ்சம் லேட் ஆயிடுச்சி.." ராமின் எதிர் சீட்டில் அமர்ந்தான் லெனின்.
"வாடி மாப்ள...இதே பொழப்பா போச்சு உனக்கு...ரூம்ல தண்ணி அடிக்க கூடாதுன்னு சொன்னாலும் சொன்னாங்க...நம்ம பொழப்பு நாறப் பொழப்பு ஆயிடுச்சு மச்சி"
"இன்னிக்கு தண்ணிய போட்டுட்டு ரூம்க்கு போயி பிரச்சினை பண்ணிடலாமான்னு சொல்லு...தூள் கிளப்பிடுவோம் ..." கடுப்பானான் லெனின்.
"விடுறா மச்சான், நான் வீக்கெண்டு தான் இங்க வரேன். நீ அங்கேயே இருக்கிறவன்.எதுக்கு பிரச்சினைய பண்ணிக்கிட்டு...அவனுங்களாவது ஒழுக்கமா இருந்துட்டு போவட்டும்...அட்லீஸ்ட் அப்படி அற்பமா நினைச்சுட்டு சந்தோஷமா வாழ்ந்துட்டு போகட்டும்." என்றான் ராம்.
"மச்சி பை த பை இவரு என் கூட ஆபிஸ்ல வொர்க் பண்றவரு...இவரு பேரு கோபாலன்.என்னோட சீனியர்." இன்ட்ரோ கொடுத்தான் லெனின்.
"ஹலோ பாஸ் என் பேரு ராம்."
மேட்ச் ஆரம்பித்து 15 ஓவர் முடிந்த நிலையில் பாகிஸ்தான் அணி 100 ரன்களுக்கு 4 விக்கெட்கள் இழந்திருந்தது.இன்னொரு குவார்ட்டர் நெப்போலியன் வரவழைக்கப் பட்டது.
"அப்படி போடுங்கையா...இன்னும் முப்பது ரன்னுக்குள்ள எல்லாத்தையும் அவுட் பண்ணுங்க"
ஐந்தாவதாக இறங்கிய அப்ரிடி அவுட் ஆன சந்தோஷத்தில் குதித்தார் கோபாலன்.
பின்னர் இறங்கிய ரசாக்கும், உமர் அக்மலும் நிலைத்து ஆடி, அதிரடியாக ஐம்பது ஓவர்களின் முடிவில் அணியின் ரன்களை 280 ஆக்கி இருந்தனர்.
மீண்டும் மூன்று குவார்ட்டர் வாங்கி முடிக்கப்பட்ட நிலையில் இந்தியா 42 ஓவர்களில் 200 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி கொண்டிருந்தது.
"இவனுங்க இப்படி அடிச்சுட்டானுன்களே. இப்படி தான் நம்மளை எல்லா விஷயத்துலயும் அடிக்கறானுங்க. பொறம்போக்கு கஸ்மாலங்க...சுதந்திரம் வாங்குனப்பவே நம்ம ஊர்ல இருக்குற மிச்ச பேரையும் அங்கேயே அனுப்பி இருக்கணும். நம்ம கும்பிடற கோவிலை இடிச்சுட்டு அவனுங்க கட்டுனானுங்க...அதை நாம இடிச்சா பிரச்சினை பண்றானுங்க..." என்று கொதித்தார் கோபாலன்.
"விடுங்க பாஸ்...என் பேரே ராம்...நானே கூலா இருக்கேன்..நீங்க ஏன் இப்படி டென்ஷன் ஆகுறீங்க...விளையாடும் போது தான் அந்த டீம் நமக்கு எதிரி...மைதானத்தை விட்டு வெளியே வந்தா அவங்களும் மனுஷங்க தானே...அவங்களுக்கும் குடும்பம் குழந்தைங்க இருக்கும். எல்லா ஊர்லயும் , நாட்டுலயும், இனத்துலயும் சில பேரு செய்ற தப்புக்கு ஏன் அந்த சமூகத்தையே பழி வாங்கிட்டு இருக்கோம்? கண்ணுக்கு கண் என்று அடித்து அடித்து முக்காவாசி பேரு குருடன்கள் ஆகிட்டோம்." என்றான் ராம்.
"ராம்னு பேரு வெச்சா நீங்க கடவுள் ஆயிட முடியுமா? உங்கள மாதிரி ஆளுங்கனால தான் நம்ம இந்து சமூகமே சீரழியுது.." கோபமாக உளறினார் கோபாலன்.
"என்ன சார் உளருறீங்க...நானூறு வருஷத்துக்கு முன்னாடி எப்பயோ அவங்க உங்க ராமர் கோவிலை இடிக்கும் போது பாத்துகிட்டே தானே இருந்தாங்க உங்க ஆளுங்க...அப்போ ஏன் தடுத்து நிறுத்தல?அப்போ நீங்க நான் எல்லாம் பொறக்கவே இல்ல...அப்போ உண்மையா என்ன நடந்துச்சுன்னு நம்ம யாருக்குமே தெரியாது...எவனோ காலப்போக்கில பத்த வெச்சது எத்தனை விஷயமோ....அப்ப விட்டுட்டு இப்போ எதுக்கு கிளறுறீங்க...ரோஷம் லேட்டா தான் உங்க ஆளுங்களுக்கு வந்துச்சோ?" பதிலடி கொடுத்தான் ராம்.
"சார்...உங்களுக்கு ஓவர் ஆயிடுச்சு...வாங்க கெளம்பலாம்...எனக்கும் பசிக்குது. பக்கத்துல இருக்குற தள்ளு வண்டி கடைல போயி தோசை சாப்பிடுவோம்."
பேச்சை திசை திருப்பினான் லெனின்.
அனைவரும் ஆளுக்கொரு முட்டை தோசை சொன்னார்கள். முதல் தோசையை லெனின் கோபாலனுக்கு கொடுக்க, அவர் சாப்பிடும் போதே, லெனினும் அவர் தட்டில் ஒரு பகுதியை கொஞ்சம் காலி செய்து இருந்தான். பிறகு ராமுக்கும், லெனினுக்கும் கடைக்காரம்மா தோசையை கொடுக்க, இப்போது லெனின் தட்டில் கார சட்னியை கொட்டி ஒரு பகுதியை சாப்பிட முயன்றார் கோபாலன்.
தனது தட்டில் கைவைக்க முயன்ற அவரை தடுத்து நிறுத்திய லெனினை குழப்பமாக பார்த்தார் கோபாலன்.
லெனினோ கூலாக அவரைப் பார்த்து, "மசூதி விஷயத்துல தான் நீங்க லேட்டுன்னு நினைச்சேன், முட்டை தோசை விஷயத்துல கூட நீங்க லேட்டு தான் சார். நான் உங்க தட்டுல சாப்பிடும் போதே நீங்க என்னை தடுக்காம விட்டுடீங்க. அதுக்காக நானும் அப்படி இருக்க முடியாது.ஐ ஆம் சாரி சார்." என்றான்.
என்ன செய்வது என்று தெரியாமல் விக்கித்து நின்ற கோபாலனிடம் "இந்தியா ஜெயிடுச்சே!!!" என்று தனது சந்தோஷத்தை கூச்சலிட்டுக் கொண்டு சென்றான் ஒரு இளங்குடிமகன்...
0 ரீலு ஓடிருக்கு..:
Post a Comment