கதவை திறக்க முடியவில்லை

நேற்று இரவு வழக்கம்போல அலுவலகப் பணிகளை(?!) முடித்துவிட்டு , எட்டு மணி அளவில் எனது பைக்கை எடுத்து எனது ரூமை நோக்கிப் புறப்பட்டேன். பதினைந்து நிமிடப் பயணம். எனது அறையின் கீழே உள்ள பார்கிங் லாட்டில் பைக்கை நிறுத்தி விட்டு, எனது அன்றாட செயல்களாகவே மாறிவிட்ட குவார்ட்டர் மற்றும் சைட் டிஷ்களை வாங்க டாஸ்மாக் நோக்கி விரைந்தேன். நேரம் மணி 8 :25 . 

நான் எதிர்பார்க்கும் நெப்போலியன் வழக்கம் போல ஸ்டாக் தீர்ந்து விட்ட நிலையில், வேறொரு பெயர் தெரியா சரக்கு வாங்கியாகிவிட்டது. பரிச்சயப்பட்ட நாயர் கடையில் சைட் டிஷ்களான இரண்டு வாழைப் பழம், கடலை பர்பி, நாலு பில்ட்டர் சிகரெட், ஒரு

பாக்கெட் மிக்சர் வாங்கிக் கொண்டேன். அண்ணாச்சி கடையில் ஏழு பரோட்டாவும், ஒரு ஆம்லெட்டும் வாங்கிய பிறகு ரூம் நோக்கி நடந்தேன்.

கதவை நெருங்கும் போது நம் உள்மனம் சாவியை எடு என்று கட்டளையிட்ட போது தான் நான் சாவியை எங்கேயோ தொலைத்த விஷயம் உணர முடிந்தது.வழக்கமாக அறை சாவியை தனியாகவே வைத்து இருப்பேன். அனால் அன்று  காலையில் தான் ஒன்றாக இருக்கட்டுமே என்று பைக் சாவி செயினில் இதையும் கோர்த்தது ஞாபகத்துக்கு வந்தது.

என்ன நடந்திருக்கும் என்று என்னால்  யூகிக்க முடிந்தது. பைக் ஓட்டும் போது ஏற்பட்ட அதிர்வில் கீ செயினில் இருந்து எனது அறை சாவி எங்கோ கழண்டு விழுந்து இருக்கிறது. அதை தேடுவது என்பது  சாத்தியம்  இல்லை என்று புத்திக்கு உரைத்ததால் பூட்டை உடைக்கும் முயற்ச்சியில் ஈடுபடலானேன்.

இதற்கு முன்னர் என் அண்ணன் என்னுடன் தங்கியிருந்த போது சாவியை தொலைத்து விட்டான். அப்போது அவனிடம் "ஒரு சாவியை கூட உன்னால பத்திரமா மெயின்டேன்  பண்ண முடியல இந்த லட்சணத்துல உனக்கு பொண்ணு வேற பாக்குறாங்க!" என்று நான் எள்ளி நகையாடியது நினைவுக்கு வந்தது.

பூட்டை உற்றுப் பார்த்தேன். இன்றைக்கு அது சற்று பெரியதாகவே தெரிந்தது. என்னைப் பார்த்து ஏளனம் செய்வது போல தெரிந்தது. வந்த கடுப்பில் கல்லை தேடினேன். கிடைக்காததால் கீழே ஓடினேன். நல்ல கருங்கல்லாக தேர்ந்தெடுத்து கதவை நோக்கி விரைந்தேன்.

ஆத்திரத்துடன் பூட்டின் மேல் எனது முழு பலமும் கொண்டு கல்லினால் அடித்தேன். பூட்டு நசுங்கியதே தவிர உடைவது மாதிரி தெரியவில்லை. எதிர் அறை நண்பர் ஒருவர் அவர் பங்குக்கு சிறிது நேரம் அடித்தார். வேலைக்கு ஆகவில்லை. கம்பியை வைத்து பூட்டை உடைக்கலாம் என்று அவர் ஐடியா கொடுக்க கம்பியை தேடி அலைந்து அது கிடைக்காததால் மீண்டும் கல்லை வைத்து எனது போராட்டம் தொடங்கியது.

இப்போது மணி ஒன்பதை நெருங்கிவிட்டிருந்தது. இன்னும் கால் மணி நேரம் கடத்தினால் அனைத்து கடையும் மூடி விடுவார்கள் என்பதால் நான் வாங்கிய சரக்கு மற்றும் உணவு பொட்டலங்களை எனது ஹெல்மேட்டிலே வைத்து விட்டு, ஹார்ட்வேர் கடை நோக்கி விரைந்தேன். பூட்டும் தருவாயில் இருந்த ஒரு கடையில் ஆக்ஷா ப்ளேடு ஒன்றை வாங்கிக்கொண்டு நம்பிக்கையுடன் மீண்டும் என் அறை நோக்கி விரைந்தேன்.

ஆக்ஸா ப்ளேடை கொண்டு எனது பூட்டு அறுப்பு போராட்டம் தொடங்கியது. அறை மணி நேர கடின உழைப்பில் ஆக்ஸா ப்ளேடு சூடாகி உடைந்து விட்டது. பூட்டின் கொண்டியை முக்கால் வாசி அறுத்திருந்தேன். கைப்பிடி இல்லாத ப்ளேடு என்பதால் வலது கை ஆட்காட்டி விரலில் சதை பேர்ந்திருந்தது.

மீண்டும் என்னை சற்று ஆசுவாசப் படுத்திக் கொள்ள, கீழே உள்ள நாயர் கடைக்கு சென்று, ஒரு வாட்டர் பாக்கெட் வாங்கி குடித்து விட்டு பில்ட்டரை பற்ற வைத்தேன். நேரம் சரியாக பத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. இதற்கு மேலும் தனியாக போராடினால் வேலைக்கு ஆகாது என்பதை உணர்ந்து என் அறைக்கு பக்கத்து பில்டிங்கில் உள்ள ஒரு சிறிய லேத்து பட்டறையில் உள்ளவர்களிடம் எனது நிலையை விளக்கினேன்.

உடனே அவர்களில் ஒருவர் சற்று பெரிய ஆக்ஸா ப்ளேடு மற்றும் ஒரு இரும்பு தடியுடன் என் அறைக்கு வந்தார்.
ஏற்கனவே நான் முக்கால்வாசி அருத்திருப்பதை பார்த்த அவர், இரும்பு தடியை கொண்டு ஓங்கி அடித்தால் எளிதில் உடைத்து விடலாம் என்றார். ஆனால் அவருடைய கணக்கு பொய்த்தது. சுமார் முப்பது அடி வாங்கியும் கூட பூட்டு பல்லை காட்டிக் கொண்டு ஸ்ட்ராங்காக இருந்தது.

நித்தியானந்தர் படத்தை எடுத்தவரை கூப்பிடுங்கப்பா அவர் தான் எந்த கதவா இருந்தாலும் ஈசியா திறந்திடுவார் என்று எனது பக்கத்துக்கு அறை நண்பர் கமென்ட் அடிக்க அனைவரும் சிரித்தனர். என்னுடன் வந்த லேத் நண்பர் இன்னொரு ஆளை அழைத்து வந்தார். அவர் ஆக்ஸா ப்ளேடை வைத்து சுமார் முக்கால் மணி நேரம் அறுத்தெடுத்தார். அவருக்கு உதவியாக இன்னொரு அறை நண்பர் டார்ச் லைட் கொண்டு வெளிச்சம் கொடுத்தார்.

நானும் சளைக்காமல் பார்த்து கொண்டே இருந்தேன். கிட்டத் தட்ட முடித்து விட்ட நிலையில் மீண்டும் இரும்பு தடி கொண்டு அடிக்க, பூட்டு உடைய வில்லை. மீண்டும் சில நிமிடங்கள் ஆக்ஸா ப்ளேடு அறுப்பு பின் இரும்பு அடி என தொடர் போராட்டங்களுக்கு பிறகு ஒரு வழியாக பூட்டு உடை பட்டது.ஒவ்வொரு இரும்பு அடியின் போதும் என் அண்ணன் என்னைஅடிப்பது போல இருந்தது.

இருந்த கடுப்பில் மற்றும் லட்சியத்தை அடைந்த திளைப்பிலும், மூன்று மணி நேரமாக என்னை ஏக்கத்துடன் இல்லை நான் ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்த சரக்கு பாட்டிலை  ராவாக அடித்து விட்டு படுத்தேன்.
அப்போது யோசித்த போது தான் தெரிந்தது. எனக்கு உதவிய ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாநிலத்தார். லேத் நண்பர்கள் ராஜஸ்தானையும், டார்ச் பிடித்தவர் கேரளாவையும், கூட நின்று சிற்சில உதவிகள் புரிந்தவர்கள் முறையே ஆந்திர மற்றும் கர்நாடகாவை சேர்ந்தவர்கள். லேத் நண்பர்களுக்கு பணம் கொடுக்க நான் முயன்ற போது, "போங்க சார், போய் தூங்குங்க" என்றனர்.

என்னிடம் சிறு எதிர்பார்ப்பும் கொள்ளாமல் அவர்கள் எனக்கு உதவியது மிகுந்த மகிழ்ச்சியையும் வியப்பையும் தந்தது. இத்தனைக்கும் அவர்கள் அனைவரிடமும் நான் சரியாக பழகியது கூட இல்லை. அன்று தான் ஒருவருக்கொருவர் பேசியே இருப்போம்.

ஆம் இந்தியா.. நம் திருநாடு வேற்றுமையிலும் ஒற்றுமை கொண்டது தான். அதற்கு இந்த சிறு உதாரணமே போதும். வீட்டுக்குள் ஒற்றுமை இருந்தால், தெருவுக்குள்ளும், ஊருக்குள்ளும், நாட்டுக்குள்ளும் ஒற்றுமை நிச்சயம் இருக்கும்.
ஜெய் ஹிந்த்!

2 ரீலு ஓடிருக்கு..:

  1. அரசியல் வாதிகளாளதான் எப்பவுமே பிரச்சனை .. சாதாரண மக்களால எதுவுமே இல்லை ..

    எனக்கும் இதுப்போல பல சந்தர்ப்பங்களில் உதவிய மக்களும் உண்டு ..:-)

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
 
டக்கால்டி © 2010