கக்கூஸ் வசனங்கள் (18+)

"வணக்கம் சார்...என்னால ஒரு மாசமா நடக்கவே முடியல..பையனுக்கு படிப்பு வர மாட்டேங்குது...எங்க அப்பாவுக்கு வியாதியோ வியாதி..அம்மாவுக்கு ஹார்ட் ஆபரேஷன் பண்ணனுமுங்க...தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணனுமுங்க...வீட்டுல ஒரே கஷ்டமுங்க...



அது சரி..இதை எல்லாம் ஏன் பேங்க்ல வந்து என்கிட்டே ஏன்யா சொல்லிட்டு இருக்க?


இல்ல கஷ்டத்தை சொன்னாத்தான் பேங்க் லோன் கிடைக்கும்னு சொன்னாங்க அதான்..."


இது ஒரு பழைய ஜோக்குங்க...இது போல தானுங்கோ நான் இப்போ சொல்ற விஷயமும். படிச்சதுக்கு அப்புறம், "இத எல்லாம் ஏன்டா எங்க கிட்ட சொல்ற"ன்னு கேட்டீங்கன்னா அதுக்கு என் கிட்ட பதில் இல்லீங்கோ.இப்போதைக்கு செவுடன் காதுல சங்கு ஊதுன கதையா தான் நெனச்சு இந்த இடுகையையே எழுதுறேன்.




நானும் ரொம்ப நாளாவே இதைப் பற்றி எழுதனும்னு நினைச்சு மறந்து போயிடுறேன்.இப்ப தான் அதுக்கு நேரம் வந்துருக்கு.சொல்லப் போனால் பலரும் இதை கவனிச்சு இருப்பீங்க. பலர் ஒருமுறையேனும் என்னைபோல திட்டி தீர்த்து இருப்பீர்கள்..சிலர் இதெல்லாம் ஒரு மேட்டர்னு இதுக்கு போயி இப்படி கொதிச்சு போறீங்களே என்று கூறலாம். ஆனால் இனால் இதை சாதரணமாக ஜீரணிக்க முடியவில்லை.



அப்புறம் இன்னொரு விஷயம். இந்த இடுகைக்கு 18 + போட தேவை இல்லை தான். ஆனா கொஞ்சம் காரமா எழுத வேண்டி இருக்கு. போடலைனா பள்ளியில் பாலியல் கல்வி போதிக்கலாம் ஆனால் வலைப்பூவில் ஆபாசமாக எழுதக் கூடாது என்று கூறும் சமூக காவலர்கள் உத்தரவின் பேரில் அந்த குறியீடு... அதனால் தான் 18 +. கவுண்டர் "ஆஹா என்ன பொருத்தம்" என்ற படத்துல பரிவட்டதுக்கு ஆசைப்பட்டு கையில பூச்ச்சட்டியும் சாட்டை அடியும் வாங்கும் போது கொந்தளிச்சு போயி

 "இந்த நாலு முழ துணியை தலைல கட்டுனா பரிவட்டம், இடுப்புல கட்டுன வெட்டி, தோள்ள போட்டா துண்டு..உள்ளார கட்டுனா கோவணம்...இதுக்கு போயி ஏண்டா அடிச்சுக்குறீங்க...பரிவட்டமாவது சொரிவட்டமாவது...நீங்களே வெச்சுக்குங்க டா.." என்பார். அது போல கோபம் தான் இப்போ எனக்கும். 

ஓகேங்க..முன்னுரையே இவ்ளோ பெருசா போயிடுச்சு...ஸ்ட்ரைட்டா மேட்டருக்கு போயிடுறேன். விஷயம் என்னன்னா இப்போ வர எல்லா சேன்னல்களிலும் முக்கால் பகுதியை அடைத்துக் கொள்ளும் விளம்பரங்களும், எஸ்.எம்.எஸ் வாசகங்களும் தான். வர வர நிலைமை ரொம்ப மோசமாக போய்கிட்டு இருக்கு.அதைப் பத்தி புலம்பலாம்னு தான் இந்த இடுகை.





தூர்தர்ஷன் ஒளிபரப்பாகும் காலங்களில் எல்லாம், தொலைகாட்சி நிகழ்சிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவானதாக இருந்தாலும் மனதுக்கு நிறைவானத இருக்குமுங்க...ஒலியும் ஒளியும், சித்ரஹார், சித்ரமாலா, ஞாயிற்று கிழமை வரும் சந்திரகாந்தா,மகாபாரதம், மாநில மொழித் திரைப்படங்கள், கார்ட்டூன் நிகழ்ச்சிகளான ஜங்கிள் புக் மோக்லி, டக் டேல்ஸ் போன்றவை ஞாபகம் இருக்குங்களா? நினைக்கும் போதே எத்தனை எத்தனை இனிமையான ஞாபங்கள் நம் மனதில். நான் சொன்ன இந்த நிகழ்சிகளில் எல்லாம் தேவை இல்லாத அதிக நேர விளம்பரங்கள் என்பதே கிடையாது. அது சரி பூக்கடைக்கு எதுக்குங்க விளம்பரம்.

சொல்லப்போனால் "இது ஒரு விளம்பரதாரர் நிகழ்ச்சி" என்று காணும் போதே மனதில் ஒரு சந்தோசம் இருக்கும். ஏனெனில் விளம்பரதார் நிகழ்சிகள் தான் பொழுதுபோக்குபவையாக இருக்கும். "வயலும் வாழ்வும்", "எதிரொலி", "உலா வரும் ஒளிக்கதிர்" போன்ற நிகழ்சிகளுக்கு எல்லாம் விளம்பரதாரர்கள் மிகவும் குறைவே. அன்றைய விளம்பரங்களும் இப்போது நினைக்கையிலும் அந்த நாட்களை ஒட்டிய நிகழ்வுகளை அசைபோட்டு பார்த்து ரசிக்கத் தக்க வகையில் இருக்கும். சில சாம்பிள்களை பார்ப்போம்.


"வாஷிங் பவுடர் நிர்மா,வாஷிங் பவுடர் நிர்மா
பாலை போலே நிறமே..நிர்மாவாலே வருமே...
வண்ணத் துணிகள் எல்லாம் பலபலத்திடும் நிறமே.."

என்று குட்டிப்பாவாடை சுற்றி ஆடிவரும் சுட்டிப்பெண் மறைந்த நிகழ்வை அவ்விளம்பரம் ஒவ்வொரு முறை ஒளிபரப்பபடும் போதும் அனைவரும் அந்த செய்தியை சொல்லிக்கொள்வதுண்டு.

"குழந்தை ஏன் அழுவுது? உட்வர்ட்ஸ் கிரைப் வாட்டர் கொடு..நீ குழந்தையா இருக்கச்சே அதை தான் கொடுத்தேன்" என்று மூன்று தலைமுறை பெண்கள் பரிந்துரைப்பது மிகவும் பிரபலம்.


"சொட்டு நீலம் டோய்..ரீகல் சொட்டு நீலம் டோய்
என்ன வெண்மையோ ஆஹா என்ன வெண்மையோ?
லிட்டருக்கு நாலு சொட்டு
துணிகளை எடுத்து
அழித்து பிழிந்துடு ...
வேறென்ன இதுக்கு
உஜாலா இருக்கு..."

இது போன்றவைகள் வெறும் விளம்பரங்கள் மட்டும் இல்லை. காலப் பதிவேடுகள்.அப்புறம் சனிக்கிழமை இரவுகளில் ஒளிபரப்பப்படும் திரைப்படத்துக்கு முன்னாடி பத்து நிமிடம் விளம்பரம் போட ஆரம்பித்தார்கள்.அதன் பிறகு விளம்பரமே இருக்காது.ஆனால் நானெல்லாம் அதனாலேயே உண்ட களைப்பில் படம் பார்க்காமல் உறங்கி விடுவேன்.


ஆனால் இன்னைக்கு நிலைமை எப்புடி இருக்கு பார்த்தீங்களா?


"குளிக்காத..." என்று கூவும் ஒரு விளம்பரம். பெண்களின் மாதவிலக்கை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து அப்பட்டமாக அனைவருக்கும் விளக்கும் சில விளம்பரங்கள் என்று பட்டியல் நீளும். தற்போதைய விளம்பரங்களில் காலம் கடந்து நிற்கும் என்று என் மனதில் தோன்றுவது வோடபோன் ஜூ ஜூ விளம்பரம் தான். இன்னும் சில இருக்கலாம். இப்போது என் நினைவில் இல்லை.


கொடுமையிலும் கொடுமை என்னன்னா, கிரிக்கெட் ஆட்டத்தின் போது ஒளிபரப்படும் விளம்பரங்கள். முன்பு ஒவ்வொரு ஓவர் இடையிலும் ஒளிபரப்பினார்கள். பின் ஓவர் மற்றும் விக்கெட் இடைவெளிகளில், அதற்கு அப்புறம், ஆடம் தடை படும் போதெல்லாம் (பந்து மாற்றம், பேட்ஸ்மான் தண்ணீர், க்ளவுஸ்,மட்டை கேட்கும் போது என்று நீண்டது. பிறகு எவன் கொடுத்த யோசனைன்னு தெரில, ஸ்க்ரீனை ஒரு பக்கம் கால்வாசி சுருக்கி அதில் விளையாட்டை காட்டிவிட்டு மீதி இடங்கள் பூராவும் ஸ்லைட் ஓட்டுவது. தைரியம் இருந்தா இதை மெகா சீரியல்களில் புகுத்திப் பாருங்கள். தமிழ்நாடு தங்கமணிகளின் சாபங்களில் இருந்து பெறப்படும் அந்தந்த கரென்ட் லைன் மென் சாபத்தை நீங்கள் பகிர்ந்து கொள்ளுவீர்கள். இப்படி எல்லாம் கடுப்பேத்துறாங்க மை லார்ட்...


அடுத்த மேட்டர், சன் மியுசிக் உட்பட மற்ற அலைவரிசைகள். கக்கூஸ் சுவர்களில் எழுதப் படும் வாக்கியங்கள் அனைத்தும் இந்த அலைவரிசைகள் தொடங்கியுள்ள எஸ்.எம்.எஸ் கட்டங்களில் தோற்றுப் போய்விடும். ஏனெனில் கக்கூஸ் வாக்கியங்கள் எதிரி போல...அதைப் படித்தவுடனேயே அதிலுள்ள வக்கிரங்கள் புரிந்து விடும். இரண்டாம் ராகம் துரோகியை போல. வக்கிரங்கள் உள்ளே பொதிந்து இருக்கும். அன்பும் அக்கறையும் மேல்வர்ண பூச்சுகளாய் பல்லிளிக்கும்.அதிலும் அவனுங்க பேரு வெச்சு கூபிடுறதும் எழுதுறதும் இருக்கு பாருங்க. அவற்றில் சில சாம்பிள்கள்:


செல்லம், ஐ லவ் யூ,புருஷ்,பொண்ட்ஸ்,பொண்டாட்டி, புருஷன், பொம்முக்குட்டி, ராசாத்தி, புஜ்ஜிமா,புச்சு குட்டி, பொம்பளையா இருந்தா அம்முகுட்டி,ஆம்பளையா இருந்தா அப்புக்குட்டி, அழுக்கா, ரவுடி,பொருக்கி,போக்கிரி,ச்வீட் ராஸ்கல் போன்றவை.

அதோட இல்லாம இன்னும் ஒருபடி மேல போயி, கில்லி ஜனா, அமர்க்களம் ஆனந்து, ஆறு ஆறுமுகம் போன்று பல பேரு. ஒவ்வொரு பத்து நிமிடத்துக்குள் ஆறேழு திவ்யாகளும்,ப்ரியாக்களும், கார்த்திக்களும்,சூர்யாக்களும் எப்படியும் மெஸ்சேஜி விடுவதன் மர்மம் என்னன்னே தெரியலை. இன்னும் சில கொப்பரை தலையனுங்க... "திஸ் சாங் இஸ் ஒன்லி பார் ---- பேன்ஸ்" என்று போடும் போது நாமெல்லாம் அந்த நடிகனின் பாட்டை பார்க்கவே கூடாதுன்னு தெரிஞ்சுக்கிட்டேன்.இன்னும் சில பேர் "ப்ளீஸ் அக்செப்ட் மீ, பீல் மை லவ்" என்று பிச்சை எடுத்துட்டு இருப்பானுங்க. அத்தனை வருஷமா அவனுக்கு பாலூட்டி, மோரூட்டி, நெய்யூட்டி, தயிரூட்டி வூட்டுல இருக்குற, வளர்த்த தாய் தகப்பன் கிட்ட ஒருவார்த்தை "சாப்பிட்டியா" ன்னு கேக்க மாட்டானுங்க. ஆனா ஜாரிங்க கிட்ட மட்டும் பேசுறதுக்கு ஒரு எஸ்.எம்.எஸ்ஸுக்கு மூணு ரூபாய் செலவு பண்ணி "ஹாய் டா செல்லம்! ஹாட் டின்னர்?" ன்னு பீட்டர் விடுறானுங்க. யப்பா சாமி! இப்படி தான் இவனுங்க தொல்லை காலைல இருந்து நைட்டு பத்தரை வரைக்கும் தொடரும்.


இதுல க்ரூப்பா வேற திரியறாங்க. அவனுங்களுக்கு மத்தியில இருக்குற சங்கேத பாஷைகளை போட்டு இந்த மாதிரி பல பேர் பார்க்கும் போது நிகழ்சிகளில் பேசிக்குவாங்க. தெரியாம அதை படிச்சுடோம் அவ்ளோ தான் அது என்னவா இருக்கும்னு யோசிச்சே அந்த நாள் நமக்கு வெளங்காம போயிடும். பின்ன தமிழனுக்கே உரிய க்யுரியாசிடி எனக்கும் இருக்கும் இல்ல.


ஏற்கனவே பல வழிகளில் கொள்ளை அடிக்கும் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அதிகம் காசு பார்க்கிறார்கள். போர்க்களம் என்ற அண்மையில் வெளிவந்த படத்தில் ஒரு காட்சி வரும். ஒருவர் மாடியிலிருந்து நான் தற்கொலை செய்யப்போகிறேன் என்று ஊரை கூட்ட அதை படம் பிடிக்க வரும் ஒரு செய்தி சேனல் ரிப்போர்ட்டர் "இவரு மாடியில இருந்து குதிப்பாரா மாட்டாரான்னு உங்க போனை எடுத்து 76767 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்புங்க" என்ற காட்சி வரும். அந்த காட்சி நிஜ வாழ்வில் நடந்தேறும் நாள் வெகு தொலைவில் இல்லை.

அய்யா..அம்மா...உங்களுக்கும் இந்த இடுகை புடிச்சு இருந்தா உங்க மொபைல் எண்ணுக்கு நீங்களே எஸ்.எம்.எஸ் அனுப்பிசுக்குங்க. டக்கால்ட்டி தான் அனுப்ப சொன்னான்னு வேற யாரையும் தொந்தரவு பண்ணாதீங்க.


மனசுல இருந்த கடுப்பை கொட்டிட்டேன். பொறுமையுடன் படித்த அனைவருக்கும் நன்றி.! மீண்டும் கண்டிப்பாக இதுபோல எதாச்சு பினாத்த வருவேன்.

1 ரீலு ஓடிருக்கு..:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
 
டக்கால்டி © 2010