தடா ...


கடந்த சனிக்கிழமை வழக்கமானதாக இல்லாமல் சென்றது. ஆம் எப்போதும் வார இறுதியில் மப்பில் மட்டையாவது வாடிக்கையாகிப் போன தருணத்தில் மனதிற்கும், உடலுக்கும் வலிமையையும், புத்துணர்வையும் கொடுக்க வல்லதாக அமைந்த தடா நீர்வீழ்ச்சி பயணம் பற்றிய கட்டுரை இது.

சென்னைக்கு வேலை நிமித்தமாக வந்து கிட்டத் தட்ட மூன்று வருடங்கள் ஆன பின்பும், இதற்கு முன் சென்னை வந்தபோதும் கூட இந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்று எண்ணியபோதும் கூட இப்பொது தான் அதற்கு வாய்ப்பு கிட்டியது. ஏன் சொல்லப்போனால் வாய்ப்பை நாங்களே தான் ஏற்படுத்திக் கொண்டோம்.

நண்பர்கள் ஐந்து பேர் செல்ல திட்டமிட்டிருந்தோம்.முதலில் பைக்கிலேயே ஐவரும் சென்று விடலாம் என்ற திட்டம் அடிக்கிற வெயிலைப் பார்த்ததும் காரிலேயே செல்லலாம் என்ற மெஜாரிட்டி (ஐவரில் மூவர், என்னையும்,இன்னொருவரையும் தவிர்த்து) காரணமாக மாற்றப்பட்டது.

அதன்படி வேளச்சேரியில் இருந்து நானும், காருக்கு சொந்தக்காரரான நண்பரும் சனிக்கிழமை காலை 8 :45 மணிக்கு புறப்பட்டோம். ஈக்காடுதாங்கல் காசி தியேட்டர் அருகே ஒருவரையும், பின் வடபழனி வைட் ஹவுஸ் பார் அருகே மற்றொரு நண்பரையும் பிக் அப் செய்ய வேண்டும். எனவே நாங்கள் காசி தியேட்டர் பாலம் அடைந்தபோது 9 :15 ஆகி விட்டது. அங்கு எனது நண்பர் அவருடைய நண்பரின் கண்ணில் பட்டுவிட்டதால் அவரும் வர விருப்பப்பட நால்வர் காரிலும் அவர் பைக்கிலும் வர திட்டமிட்டோம்.

இதற்கிடையில் இன்னொரு நண்பரும் திடீரென்று வர சம்மதிக்க, ஐவர் காரிலும் இருவர் பைக்கிலும் பயணித்தோம். ஒவ்வொருவரையும் பிக் அப் செய்து கிளம்பும் போது மணி 10 :30 ஆகிவிட்டிருந்தது. மெதுவாக நகரத்தின் சாலைகளை ஊர்ந்த கார், நகர எல்லையை தாண்டியவுடன் மெல்ல மெல்ல வேகம் பிடிக்க தொடங்கியது.

சரக்கு,உணவு மற்றும் குளிர்பானங்கள் ஆகியவற்றை வாங்க வேண்டும் என்று குழுமியிருந்த சில குடிமகன்கள் (என்னையும் சேர்த்து தான்) விருப்பப்பட்டதால் வண்டி புதுவாயல் அருகே இருந்த ஒரு டாஸ்மாக் அருகே நிறுத்தினோம். காலையில் சிலர் சாப்பிடாமல் இருந்ததால் அங்கேயே சாப்பிட்டுவிடலாம் என்றும் முடிவானது. சென்ற ஏழு பேரில் ஐவர் தண்ணி வண்டி ஆதலால் ஒரு புல் ஆர்.சி, குவார்ட்டர் நெப்போலியன் (இட்ஸ் மை சாய்ஸ்), ஆப் போல்ஸ் (புதிதாக வந்திருக்கும் பிராண்டி) வாங்கினோம்.

பிறகு அருகில் உள்ள ஒரு ஹோடல்லில் நான்கு பேர் சாப்பிட ஆரம்பித்தோம். அனைவரும் நான்கு இட்லி, வடை மற்றும் வடகறி சாப்பிட்டோம். பில் வெறும் 42 ரூபாய் தான். உணவு மோசம் என்றும் சொல்ல முடியாது. ஓகோ என்றும் புகழ முடியாது. இதே உணவை சென்னையில் சாப்பிட வேண்டுமானால் எப்படியும் 70 -80 ருபாய் செலவு ஆகியிருக்கும்.

பிறகு மீண்டும் பயணம் தொடர்ந்தது. கும்மிடிப்பூண்டி, பெரிய ஒபள்ளபுரம், எலவூர் வழியாக தடா சென்றடைந்தாகி விட்டது. செக் போஸ்ட் என்ற போர்டை பாத்ததும் சற்று உஷாராகி வண்டியை நிறுத்தி டிக்கியில் வைத்திருந்த சரக்கு பாட்டில்களை எடுத்து நாங்கள் அமர்ந்திருந்த இருக்கையின் கீழே உள்ள சந்துகளில் ஒளித்து வைத்து விட்டு வண்டியை ஓட்டுகின்ற நண்பரை மெதுவாக செலுத்த சொன்னோம்.

ஆனால் நாங்கள் எதிர்பார்த்தது போல செக்போஸ்ட் என்பது இல்லை. அங்கு ஒரு போலிஸ்காரர் கூட இல்லை. பல்பு வாங்கியது எங்கள் ஒவ்வொரு முகத்திலும் தெரிந்தது. தடா சென்றவுடன் அங்கு மதிய உணவுக்காக நிறுத்தி வேண்டியவர்கள் தங்களுக்கு பிடித்த உணவு வகைகளை வாங்கிக் கொண்டனர்.

தடா பால்ஸ் செல்ல நெல்லூர் மெயின் ரோட்டில் இருந்து இடது புறம உள்ளே ஒரு ரோடு பிரியும். அதனுள் சென்றோம் ஆனால் உணவகங்கள் எதுவும் கிடையாது. எனவே அங்கேயே தேவையான அனைத்து உணவுப் பொருட்களும் வாங்குவது நல்லது.

அங்கிருந்து சுமார் பதினாலு கி.மீ (கரடு முரடான பாதை சுமார் 7 கி.மீ வரும்) தாண்டினால், வாகன நிறுத்தத்திற்கான இடம் வரும். போகிற வழியில் இப்போது பர பரப்பாக பேசப்பட்ட போதை லேகியம் கல்கி பகவானின் வொன்நஸ் அமைப்பின் மார்பிளில் ஆன பெரிய கோபுரம் இருக்கும். பார்க்க அவ்வளவு அழகு. அதற்கு முன்பாகவே சுமார் 7 கி.மீ முன்பாக கரடு முரடு பாதை துவங்கும் இடத்தில் ஒரு செக் போஸ்ட் இருக்கிறது. அங்கே உள்ளவர்கள் வண்டியை பரிசோதனை செய்கிறார்கள். நாங்கள் மாட்டிக் கொண்டோம். எங்களிடம் இருந்து 200 ரூபாய் பிடுங்கிக்கொண்டனர். வண்டிக்கான தொகை ஐம்பது மற்றும் ஒவ்வொருவருக்கும் தல இரண்டு ரூபாய் அனைத்தையும் செலுத்திய பின்னர் உள்ளே அனுமதிக்கப் பட்டோம்.

முன்பு செக் போஸ்ட்டில் உஷாரான நாங்கள் இப்போது கோட்டை விட்டதை நினைத்து ஒருவரை ஒருவர் கலாய்த்துக் கொண்டோம். பார்கிங் ஏரியாவிலிருந்து உள்ளே மூன்று கிலோமீட்டர் நடந்தோமேயானால் தடா நீர்வீழ்ச்சியை அடைந்துவிடலாம். நாங்கள் ஒருவழியாக பார்கிங் ஏரியா அடைந்த போது மணி ஒண்ணை நெருங்கிவிட்டிருந்தது. கொளுத்தும் வெயிலில் மேலே பயணித்தோம்.

செல்லும் வழியெங்கும் பக்கவாட்டில் சிறு சிறு நீரோடைப் பிரிவுகள், சுற்றிலும் மரங்கள், சிறு சிறு கற்கள் நிறைந்த பாதை என்று நடை பயணம் தொடர்ந்தது. பல இடங்களில் தமிழக இளைஞர்களின் கூக்குரல்கள் அவர்கள் பேசிய கேட்ட வார்த்தைகளின் மூலம் கேட்க முடிந்தது. நான் கவனித்த ஒரு விஷயம் அங்கே ஆந்திர மற்றும் பிற மாநிலத்தவர் வருகை சொற்பமே. முழுக்க முழுக்க தமிழக வண்டிகள் தான் அதுவும் சென்னை எண் கொண்ட வண்டிகளை தான் காண முடிந்தது.

ஒன்றரை கி.மீ பயணித்தால் ஒரு சிவன் கோவில் வரும். அதன் பின்னர் ஒரு சிறிய நீரோடை. மேலே நீர்வீழ்ச்சியில் தண்ணி இல்லை என்று நாங்கள் அறிந்ததால் அங்கேயே நிறுத்திக் கொண்டோம் எங்கள் பயணத்தை. அந்த நீரோடையிலேயே குளித்து விட்டு கிளம்பிவிடலாம் என்று திட்டமிட்டோம். அதன் படி நீரோடையில் அனைவரும் இறங்கினோம், முற்றிலும் பாறைகள் தான். எனவே பார்த்து பார்த்து அடியெடுத்து வைக்க வேண்டியதாகி விட்டது.

சிறிது நேரம் கழித்து வாங்கி வைத்திருந்த சரக்கை அடித்து விட்டு, சில தம்முகளை போட்ட பின் மீண்டும் எங்கள் உற்ச்சாக குளியல் இரண்டு மணி நேரம் நீடித்தது. தண்ணீர் ஆறு அடி தான் இருந்தது. எனவே தைரியமாக குளிக்க முடிந்தது. பின்னர் சுமார் ஐந்து மணி அளவில் அங்கிருந்து புறப்பட்டோம்.

உடலும்,மனமும் சுத்தமாக ஆனது போல அப்போது உணர்ந்தேன். மெயின் ரோட்டில் வந்து டீயும், வடையும் சாப்பிட அவ்வளவு சுவையாக இருந்தது. நீண்ட நேரம் நீரிலேயே கிடந்ததால் ஏற்பட்ட பசியின் விளைவு. பயணம் இனிதே நிறைவடைந்தது. நீங்களும் ஒருமுறை கட்டாயம் செல்லுங்கள்.ஏற்கனவே சென்றவர்கள் உங்கள் நினைவுகளை மீட்டெடுங்கள்.

0 ரீலு ஓடிருக்கு..:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
 
டக்கால்டி © 2010