ஜிம்பலக்கடி பம்பாவும் பம்பலக்கடி ஜிம்பாவும்..

எனக்கு எப்பவுமே இந்த ரெண்டு பேரும் கன்பியுஸ் பண்றவங்க தான்..இவர்களைப் பற்றி கொஞ்சம் பார்ப்போமா?



அண்ணன் கவுண்டமணியை தெரியாதவங்க தமிழ்நாட்டுல யாரும் இருக்க முடியாது. அப்பேற்பட்ட கலைஞன் முன்னேற, கூட நடித்த கேரக்டர்களின் பங்களிப்பு அபாரமானது.உசிலமணி,பசி நாராயணன், ஓமக்குச்சி நரசிம்மன் முதல் சார்லி,வடிவேலு வரை அனைவரும் அதில் அடக்கம்.அதில் செந்தில் பெரும் பங்கு எடுத்துக் கொண்டாலும், நாம் கவனிக்காமல் விட்ட மற்ற பலரில் ரெண்டு பேர் தான் இவர்கள். பேரிலும் கூட ஒற்றுமை உடையவர்கள். ஆம் அவர்கள் தான் கருப்பு சுப்பையா மற்றும் வெள்ளை சுப்பையா.

மேலும் படிக்கும் முன்னர் இவர்களைப் பற்றிய சிறு அறிமுகம் உங்களுக்கு. இவர்களைப் பற்றி தெரியாத சிலருக்காக. இளைய திலகம் பிரபு நடித்த ஜல்லிக் கட்டு காளை என்ற படத்தில் நகைச்சுவை பகுதியில் "ஐ ஆம் ஜிம்பலக்கடி பம்பா" என்ற ஆப்ரிக்கன் அங்கிள் ஒருவர் வருவாரே அவர் தான் கருப்பு சுப்பையா. கரகாட்டக்காரன் படத்தில் வரும் "ஊரு விட்டு ஊரு வந்து" பாடலில் பின்னால்ஆடும் ஒருவராக வருபவர் வெள்ளை சுப்பையா. இவரை மேலும் எளிதாக கண்டு கொள்ள வேண்டுமே ஆனால் "வைதேகி காத்திருந்தாள்" படத்தில் வரும் "மேகம் கருக்கையிலே" என்ற பாடலை பார்க்கலாம். இப்படி மக்ககளால் அதிகம் கவனிக்கப் படாத இவர்களைப் பற்றிய ஒரு தொகுப்பு தான் இந்த இடுகை.




90 களின் தமிழ் படங்களில், குறிப்பாக கிராமத்து கதையம்சம் கொண்ட படங்களின் டைட்டில் கார்டில் இவர்களின் பேரை பார்த்திருக்கிறேன். அப்போதிலிருந்தே இவர்களில் யார் கருப்பு சுப்பையா? யார் வெள்ளை சுப்பையா? என்ற குழப்பம் இருக்கும். கொஞ்ச நாளில் வெள்ளையாய் இருப்பவர் தான் வெள்ளை சுப்பையா என்று நானே நினைத்துக் கொண்டேன். ஆச்சரியம் என்ன என்றால் அது தான் உண்மையும் கூட. அப்போதெல்லாம் இந்த அளவு மீடியா வளர்ந்திருக்காத காரணத்தால் யாரிடம் சென்று இவர்களைப் பற்றி கேட்டாலும் அவர்களுக்கும் தெரியாது. என் அம்மாவிடம் கேட்டாலோ,படிக்கறதை பத்தி யோசிக்காம இதை பத்தி யோசிக்கிறியா? என்று மோர் கடையும் மத்துடன் தரிசனம் கொடுப்பாள்.






ஒருவழியாக வெள்ளை சுப்பையாவை பற்றிய எண்ணம் திடமாகிப் போன நிலையில் கருப்பு சுப்பையா அவர்களைப் பற்றி ஒரு புதிய குழப்பம் என்னை வந்து தொற்றிக் கொண்டது. இந்த இடத்தில் அண்ணன் பசி நாராயணனைப் பற்றி கொஞ்சம் அறிமுகம் கொடுக்கவேண்டி இருக்கிறது. சூரியன் படத்தில் தலைவர் கவுண்டமணியின் அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா என்ற நகைச்சுவை காட்சியின் துவக்கத்தில் "என்னடா ஓட்டை வாய் நாராயணா!குளிக்கிறியோ இல்லையோ சிவகடாட்சமா நெத்தில பட்டை போட்டுக்குற. ஆனா இந்த மாதிரி வேலையில இருக்கறவங்க எல்லாம் இப்படி தான் இருப்பாங்க" என்று ஒருவரைப் பார்த்து சொல்வாரே அவரே தான் பசி நாராயணன். பசி என்ற படத்தில் முதலாக நடித்த காரணத்தால் அவருக்கு இந்த பெயர். இதே படத்தில் நடித்த இன்னொரு நடிகை பசி சத்யா. இவர் கமலின் மகளிர் மட்டும் படத்தில் நாசரின் உதவியாளராக நடித்து இருப்பார்.இவரும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகையே.

வேடிக்கை என்னவென்றால், கருப்பு சுப்பையா என்பவர் பசி நாராயணனா இல்லை ஜிம்பலக்கடி பம்பாவா என்ற குழப்பம் எனக்கு இன்று தான் தீர்ந்தது. ஜிம்பலக்கடி பம்பா தான் கருப்பு சுப்பையா அவர்கள்.அவரைப் பற்றிய மேலதிகத் தகவல்களை என்னால் திரட்ட முடியவில்லை. நண்பர்கள் யாருக்கேனும் தெரிந்து இருந்தால் இணையத் தொடுப்பு கொடுங்கள்.இன்னொரு வேடிக்கையான விஷயம் இன்று வரையிலும் நான் நடிகை காந்திமதி மற்றும் வடிவுக்கரசியை பெயர் மாற்றிக் கூறி குழம்புவதுண்டு. எப்போது இவர்கள் திரையில் வந்தாலும் என் அம்மா கேட்கும் முதல் கேள்வி "இவ பேரு என்ன டா?" என் பதில் பெரும்பாலும் தப்பானதாகத் தான் இருக்கும்.சரியாக சொன்ன கணங்கள் எல்லாமே யூகத்தில் சொன்னவையே.


இப்போது அண்ணன் வெள்ளை சுப்பையாவைப் பற்றி நான் சேகரித்த தகவல்கள் உங்களுக்காக.


இவரின் சொந்த ஊர் கோவை மாவட்டம் அருகிலுள்ள புஞ்சை புளியம்பட்டி என்ற கிராமம். அந்த காலத்து நடிகர்கள் சொன்ன காரணத்தையே தான் இவரும் சொல்றாரு. சின்ன வயசில் படிப்பு வராத காரணத்தால் குறிப்பாக இங்கிலீஷ் வராத காரணத்தால் பள்ளி வாத்தியார் தொல்லை தாங்க முடியாமல் பள்ளியை விட்டு ஓடி வந்தவர். அம்மாவிடம் அடி உதை வாங்கி காலத்தை கடத்திய பொழுது அங்குள்ள ஒரு டூரிங் டாக்கீஸ் சென்று வேலை கேட்டுள்ளார். இவர் சொல்லும் ஒரு அபூர்வத் தகவல், அப்போதெல்லாம் டூரிங் டாக்கீசுக்கு ஆறு மாச காலம் தான் லைசென்ஸ் கொடுப்பார்களாம். அதற்குப் பிறகு லைசென்சை மீண்டும் புதுப் பித்துக் கொள்ள வேண்டுமாம்.

அந்த டூரிங் டாக்கீஸ் ஓனர் கோபிச் செட்டிப்பாளயத்தை சேர்ந்தவர். அப்போது அங்கிருந்தபடியே பல படம் பார்த்திருக்கிறார்.அப்போது பெரும் கூட்டம் கூடிய நடிகர் திலகத்தின் பராசக்தி படத்தில் அவரின் வசன உச்சரிப்பைப் பார்த்து நடிக்க ஆசைபட்டிருக்கிறார்.அந்தியூர் தேவி நாடக சபா ஓனரான கே.எம்.ரத்தினப் பிள்ளை அவர்களிடம் சென்று வாய்ப்பு கேட்டுள்ளார். இவ்வாறு ட்ராமாக்களில் ஐக்கியம் ஆன இவர் மொத்தம் 63 பேர் கொண்ட நாடகக் குழுவில் பல நாடகங்கள் நடித்து உள்ளார். அங்கு அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கப் பட்ட நடனம், பாட்டு அனைத்தையும் கற்றுக் கொண்டிருக்கிறார்.




பிறகு அங்கிருந்து மெட்ராஸ் வந்து லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர், எம்.ஆர்.ராதா,எம்.ஆர்.ஆர்.வாசு, ராதாரவி, ஆர்.எஸ்.மனோகர் போன்றவர்களுடன் மூன்று வருட காலம் மேடையில் நடித்து இருக்கிறார்.அப்போது இவர் நாடகத்தின் மேல் தீராத காதல் கொண்ட பைத்தியமாக அலைந்து இருக்கிறார். அப்போது எஸ்.வி.சகஸ்ர நாமம் அவர்கள் நடத்திய ட்ரூப்பிலும் நடித்து இருக்கிறார்.

கிட்டத் தட்ட 25 -30 வருடங்கள் கலைத் துறையில் இருக்கும் இவர் நடித்த முதல் படம் சிவாஜி கணேசன் நடித்து வெளியான பாசமலர் என்ற மிகப் பெரும் வெற்றி பெற்ற சில்வர் ஜுபிலி படம். இவருக்கு மீண்டும் சினிமா வாய்ப்பு சாண்டோ சின்னப்பா தேவர் அவர்களால் கிடைத்து இருக்கிறது. இன்று வரையில் அவரை தன் தெய்வமாகவே மதித்து வருகிறார். ஏற்கனவே நடித்து இருந்தாலும் 1972 ஆம் வருடம் ஜெய்ஷங்கர்,லக்ஷ்மி நடிப்பில் வெளியான மாணவன் என்ற படம் தான் இவரது முதல் திரைப் படம் என்று இவர் கருதுகிறார். அதில் இவர் காத்தாடி ராமமூர்த்தி, பாண்டு போன்றவர்களுடன் ஜெய் ஷங்கரின் நண்பர்களில் ஒருவராக நடித்து இருக்கிறார். இவருக்கு வெள்ளை சுப்பையா என்ற பேரே சாண்டோ வைத்தது தான்.

இவர் பல படங்கள் நடித்திருந்தாலும், இவரை பலருக்கு அறிமுகப் படுத்தியது, அறிமுகப் படுத்திக்கொண்டிருப்பது ஆர்.சுந்தர்ராஜன் இயக்கத்தில் உண்டான வைதேகி காத்திருந்தாள் என்ற திரைப்படத்தில் இசைஞானியின் இசையில் வெளிவந்த "மேகம் கருக்கையிலே" என்ற பாடல் தான்.பாண்டி பஜார் ஷாப்பிங்ல இருந்த போது ஒரு லண்டன் நண்பர் இவரை பார்த்து "நேத்து தான் உன்னை லண்டனில் பார்த்தேன்." என்றாராம். பேந்த பேந்த முழித்த இவரிடம் "ஆமாங்க நேத்து தான் டி.வி ல உங்கள் பாட்டை பார்த்தேன். அந்த பாடலில் நடித்தது நீங்க தானே" என்றாராம்.இப்படி இந்த பாடல் அவருக்கு நல்ல பேர் வாங்கிக் கொடுத்ததாக கூறுகிறார். அந்த பாடல் உங்களுக்காகவும்.


Popout

ஆனால் இவர் நடித்த பாடலில் எனக்கு மட்டுமல்லாமல் பலருக்கும் பிடித்திருக்கும் பாட்டு என்றால், கரகாட்டகாரனில் வரும் "ஊரு விட்டு ஊரு வந்து" என்ற பாட்டு தான்.அந்த பாடலும் உங்க பார்வைக்காக.


Popout

பயணங்கள் முடிவதில்லை, அமைதிப்படை போன்று இவர் நடித்த பல படங்கள் சில்வர் ஜுபிலி ஆகி இருக்கிறதாம். பாவலர் கிரியேஷன்ஸ் மூலம் வெளிவந்த கரகாட்டகாரன் இரண்டு வருடங்கள் ஓடியது. இளையராஜா, பாஸ்கர், கங்கை அமரன் போன்றோரின் நட்பே தன்னை அந்த படத்தில் நடிக்க வைத்ததாகவும் குறிப்பிடுகிறார். அதே பாவலர் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் வெளிவந்த பிரபு-சில்க் ஸ்மிதா நடித்த கோழி கூவுது படத்திலும் நடித்திருக்கிறார். அந்த படமும் அனைத்து ஊர்களிலும் 150 நாட்கள் ஓடியதாக கூறுகிறார்.மேலும் கேப்டன் விஜயகாந்த் நடித்த அம்மன் கோவில் கிழக்காலே,வைதேகி காத்திருந்தாள் போன்ற படங்களிலும் இவர் நடித்து இருக்கிறார். இந்த வெற்றிக்கு எல்லாம் காரணம் இளையராஜாவின் இசை தான் என்றாலும், இளையராஜா, கங்கை அமரன், ஆர்.சுந்தர்ராஜனின் நட்பும் அவர்களின் எளிமையாகப் பழகும் விதமும் தான் என்கிறார்.




ஒரு காலத்தில் தேனாம்பேட்டையில் இவர், அண்மையில் மறைந்த இசை அமைப்பாளர் சந்திர போஸ், தேவா, பாஸ்கர், கங்கை அமரன் போன்றோர்கள்
ஒன்றாக வசித்து இருப்பதை குறிப்பிட்டு இருக்கிறார். இவர்கள் அனைவரும் சங்கிலி முருகன் இருந்த லாட்ஜில் அறை எண் 92 -சியை ஞாபகம் வைத்திருக்கிறார். இன்று சாலிக்ராமம் பங்களாவில் இவர்கள் குடியிருந்தாலும் அந்த இனிமையான நாட்களை என்றும் அவர்கள் மறக்க மாட்டார்கள், இன்றும் நினைச்சுப் பார்ப்பார்கள் என்கிறார்.




இவரை சென்டிமேன்ட்டுக்காக பல படங்களில் ஒரு சீன், அரை சீன் காட்சிகளில் நடிக்க கூப்பிட்டாலும் உடனே சம்மதிப்பாராம்.இயக்குனர் தரணி இவரை அனைத்துப் படங்களிலும் நடிக்க அழைப்பதாக கூறுகிறார்.தற்போது கே.வி ஆனந்தின் இயக்கத்தில் உள்ள கோ படத்தில் நடித்து வருகிறார். இவர் சீரியலையும் விட்டு வைக்கவில்லை. சன் டி.வியில் தங்கம், ராஜ் டி,வியில் வீட்டுக்கு வீடு, கலைஞர் டி.வியில் செண்பகமே போன்ற சீரியல்களில் நடித்து வருகிறார்.




இப்படி பட்ட ஆடம்பரம் இல்லாத, கொடுக்க்கரத்தை வாங்கிட்டு நடிக்கும், எளிமையான ஒரு கலைஞனை பற்றி சில வார்த்தைகள் உங்களுடன் பகிர்ந்தமைக்கு மகிழ்ச்சி அடைகிறேன்.
கண்டிப்பா மீண்டும் எதாச்சும் பினாத்த வருவேன்.இவ்வளவு நேரம் பொறுமையுடன் படித்த அனைவருக்கும் நன்றி.

1 ரீலு ஓடிருக்கு..:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
 
டக்கால்டி © 2010