"யுத்தம் செய்"யும் உலக சினிமாவும்...


"யுத்தம் செய்"யும் உலக சினிமாவும்...

நேற்று தான் யுத்தம் செய் படத்தைப் பார்த்தேன். இந்த படத்தை பற்றி பலரும் விமர்சனம் எழுதிட்டாங்க.அதனால படத்தைப் பத்தி புதுசா சொல்றதுக்கு ஒன்னும் இல்லீங்க. ஆனா இந்த மாதிரி ஒரு படத்தை மிஷ்கின் கிட்ட இருந்து நான் எதிர்பார்க்கவில்லை.



2006 ஆம் வருடம் ஒரு ஜனவரி மாத நாளில் கோவையில் உள்ள குட்டிசுவர் எங்கும் ஓட்டப் பட்டிருந்த ஒரு படத்தின் சுவரொட்டி என் கவனத்தை மிகவும் ஈர்த்தது. படம் வெளிவரும் முன்பே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன அப்படத்தின் போஸ்ட்டர்கள். சொல்லப் போனால் ஒரு படத்தின் போஸ்ட்டரைப் பார்த்தே அந்த படம் எப்படி இருக்கும் என்பதை 75 % யூகிக்க எனக்கு கற்றுக் கொடுத்ததே இந்த படம் தான் என்று சொல்லலாம். அந்த படத்தின் பெயர் சித்திரம் பேசுதடி.அது தான் மிஷ்கினின் முதல் படம் என்று நம் அனைவருக்குமே தெரியும்.ஆனால் மிஷ்கின் என்று ஒரு இயக்குனர் இருக்காரு டா என்று அனைவரையும் சொல்ல வைத்த படம் அது.


இப்படி போஸ்ட்டரைப் பார்த்து சில படங்களில் நான் மொக்கை வாங்கியிருந்தாலும், பல படங்கள் எனக்குப் பிடித்திருந்தது. உதாரணத்துக்கு சொல்ல வேண்டுமேயானால் நந்தா பெரியசாமியின் இயக்கத்தில் 'ஒரு கல்லூரியின் கதை', விஷ்ணு வர்த்தனின் 'அறிந்தும் அறியாமலும்', ராமின் 'கற்றது தமிழ்', நிஷிகாந்த் காமத்தின் 'எவனோ ஒருவன்', புஷ்கர்-காயத்ரியின் 'ஓரம் போ', சமுத்திரக்கனியின் 'நாடோடிகள்' போன்றவை.



அடுத்த படமான அஞ்சாதேவில் கூட மிகச் சிறப்பான தனது இயக்கத்தை வெளிப்படுத்தி இருப்பார் மிஷ்கின். சொல்லப் போனால் அதிலும் கூட சித்திரம் பேசுதடியில் வரும் கதாநாயகனின் நடை, பாவனைகள் இடம் பெற்றிருக்கும். நந்தலாலாவிலும் அதையே காணமுடிந்தது. இதோ இப்போது யுத்தம் செய் படத்திலும் அதே ஹீரோ மேனரிசங்கள். அமீர் படத்தில் அவருடைய மேனரிசங்களை ஹீரோ நடிப்பில் காணலாம். அதே போலவே தான் மிஷ்கின் படத்திலும். ஆனால் அன்று சித்திரம் பேசுதடியில் நான் மிகவும் ரசித்த அந்த மேனரிசத்தை, நடிப்பை யுத்தம் செய் படத்தில் ஏனோ ரசிக்கவில்லை.


இந்த படம் ஒரு உலகப் படத்தின் தழுவல், உலகப் படத்தை தமிழ்ப் படுத்தும் முயற்சி என்று எவ்வளவு தான் கூறினாலும், அந்த மாதிரி தமிழ் படுத்தப் படுகிற உலகப்படங்களை எல்லாம் இப்போது அனைத்து தொலைக்காட்சிகளும் ஞாயிற்று கிழமைகளில் ஒளிப்பரப்பிக் கொண்டிருக்கிறது. ஆம் நான் டப்பிங் பேசும் ஜாக்கி சான் படங்களை தான் சொல்கிறேன்.




எனக்கு இன்னும் ஒன்னு புரியலைங்க... உலக சினிமா என்பது உலகில் உள்ள அந்தந்த நாடுகளில் வீற்றிருக்கும் கலாசாரத்தையும்,வாழ்க்கை முறையையும் கேமராவில் கோர்வையாக பிரதிபலிப்பது என்பது என் கருத்து.

அதனால் தான் என்னவோ 'தவமாய் தவமிருந்து' என்ற படத்தை ரசிக்க
முடிந்த எனக்கு இந்த படத்தை ரசிக்க முடியவில்லை. சொல்லப் போனால் தவமாய் தவமிருந்தும், பருத்தி வீரனும் தான் நம்ம நாட்டின் வாழ்கை முறைகளை பதிவு செய்த சில உலகப் படங்களுக்கான உதாரணங்கள்.



'காக்க காக்க' எடுத்த பிறகு அதன் சீக்வெல் ஆக 'வேட்டையாடு விளையாடு' என்ற படத்தை எடுத்த போது கவுதம் மேனனிடம் காண முடிந்த தொய்வை இப்போது மிஷ்கினிடம் காண முடிகிறது. இதில் வருத்தப்படுகிற ஒரு ஆளாக நானும்.



நந்தலாலாவின் தோல்வியால் மிஷ்கின் செய்த சில காம்ப்ரமைஸ்கள் இந்த படத்தில் அப்பட்டமாகவே தெரிகின்றன. 'வாள மீனுக்கும்' பாடலை விட 'கத்தாழ கண்ணால' பாடல் கொஞ்சம் பொலிவிழந்து போனது. அதே போல அதே ஸ்டைலில் இருக்கும் 'கட்டழகி கண்ணா' என்ற பாடலும். கேட்க நல்லா இருந்தாலும் பார்க்கும் போது சலிப்படைய செய்கின்றது. இந்த பாட்டுக்கு அமீர் எதுக்கு ஆடினாரு என்று தெரில.


சரி படத்தில் பிடித்த சில விஷயங்களை காண்போம்.


1 )முதல் விஷயமே இந்த படத்தின் சஸ்பென்ஸ் தான். அது உடைக்கப் பட்டதாலேயே படம் சப்புன்னு ஆகிடுச்சு. கே.எஸ் ரவிக்குமார் "புரியாத புதிர்" என்ற தனது முதல் படத்தை இயக்கும் போது அதன் செலவு வெறும் 29 லட்சம் தான். முப்பது நாளில் ஷூட்டிங் முடித்த அவரிடம் அதன் தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி, "படம் நல்லா வந்திருக்கு, கதை அருமையா இருக்கு நான் வேணும்னா இன்னும் கொஞ்சம் பணம் போடுறேன், படத்தை இன்னும் கொஞ்சம் ரிச்சா எடுத்துடலாம்" என்றாராம். அப்போது அதை மறுத்த ரவிகுமார், "சார் இந்த படத்துல சஸ்பென்ஸ் தெரிஞ்சுடுசுனா ரிப்பீட்டட் ஆடியன்ஸ் கம்மி ஆகிடும். அதனால இதுவே போதும்" என்றாராம். எப்புடி அவரோட மார்கெடிங் ஸ்ட்ரேட்டஜி!!!?


2 ) படத்தின் நடிகர்கள்- அனைத்து கதாப்பாத்திரத்துக்கும் அருமையான நடிகர்களை தேர்வு செய்திருக்கிறார் மிஷ்கின். லக்ஷ்மி ராமகிறிஷ்ணனின் நடிப்பு சற்று மிகையாகவே இருக்கிறது.வொய்.ஜி . மகேந்திரனின் நடிப்பு கச்சிதம். இவர்கள் இருவருக்குமே டைலாக் கம்மி என்பது தான் சுவாரசியமே. என்னோட அபிமான நடிகராக ஆகிவிட்ட ஜெயப்ரகாஷ் வழக்கம் போலவே தனது மிகை இல்லாத நடிப்பால் அசத்தி இருக்கிறார். சாகும் போது அவர் பேசும் வசனங்கள் பளிச். குலுங்கி குலுங்கி அழுத சேரனுக்கு இதில் மாறுபட்ட ஒரு கதாப்பாத்திரம். "தங்கச்சி காணாம போனதில இருந்தே பொணம் போல ஆயிட்டாருங்க" என்ற வசனத்துக்காகவே நடை பிணம் போல நடக்கிறார்..சாரி நடித்து இருக்கிறார். மற்ற கதாப்பாத்திரங்கள் ஆன மாணிக்க விநாயகம் மற்றும் பெருசுகள் தான் படத்துக்கு உயிர் நாடியே...

3 ) மற்ற டெக்னிகல் விஷயங்களான இசை மற்றும் ஒளிப்பதிவு பற்றி நமக்கு அவ்வளவாக தெரியாது என்பதால் சில வரிகளில் முடித்துக் கொள்கிறேன். இசை கே என்ற புதுமுகம். சுந்தர்.சி.பாபுவுக்கு கல்தா கொடுத்து மிஷ்கின் பிடித்திருக்கும் இசையமைப்பாளர். ஒரே பாடலும், பின்னணி இசையும் அற்புதம். சில இடங்களில் அஞ்சாதேயில் கேட்ட அதே இசை ஒலிக்கிறது. யாருக்கு தெரியும் அது மிஷ்கினின் வேண்டுகோளாக கூட இருக்கலாம்.ஒளிப்பதிவு சத்யா என்பவர். கச்சிதமாக செய்திருக்கிறார்.


ஆக மொத்தம் மோசமான படம் இல்லை என்றாலும், மிஷ்கின் போன்ற நான் நம்பிக்கை வைத்திருக்கும் இயக்குனரிடம் இருந்து வெவ்வேறு கதைக் களங்களில் படங்களை எதிர்பார்க்கிறேன்.


பொறுமையுடன் படித்த அனைவருக்கும் எனது நன்றி!!!

1 ரீலு ஓடிருக்கு..:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
 
டக்கால்டி © 2010