மனப்பக்குவம்

வருஷம் 1995 ...


காலை எட்டு மணி...

கேசவன் பேப்பர் படித்துகொண்டு இருக்கிறார்.

டேய் சீக்கிரம் கடைக்கு போயி இந்த லிஸ்ட்ல இருக்குற சாமான் எல்லாம் வாங்கிட்டு வாடா - இது கேசவனின் மனைவி விசாலாட்சி.

சரி மா...தெருவில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த சரவணன் வீட்டுக்கு ஓடுகிறான்.

சரியாக கடைக்கு கிளம்பும் போது சரவணனின் மாமா தனது குடும்பத்துடன் அவன் வீட்டுக்கு வருகிறார். அம்மா... மாமா வந்துருக்காங்க என்றான் சரவணன்.

"வாங்க அண்ணா! நல்லாருக்கீங்களா?வாங்க மதனி...ஹே குட்டிப்பொண்ணு...எப்படி இருக்க? உனக்கு அத்தையை ஞாபகம் இருக்கா? என்று வழக்கமான உபசரிப்புகளில் மூழ்கிவிட்டாள் விசாலாட்சி.



கொஞ்சம் இருங்கண்ணா...காபி போட்டு எடுத்துட்டு வரேன்...சமையலறைக்குள் சென்றாள் விசாலாட்சி. உள்ளே இருந்த சரவணனிடம்,

"டேய் அந்த லிஸ்டோடு வரும் போது குட்டி பாப்பாவுக்கு எதாச்சும் சாக்கலேட் வாங்கிட்டு வந்துடு. "

ஆசை சாக்கலேட் தானம்மா?

இல்ல டா... நீ ரொம்ப நாளா கேட்டுட்டு இருப்பியே...அந்த ஜெம்ஸ் சாக்கலேட் அது வாங்கு...

நான் கேட்கும் போதெல்லாம் அதை தின்னா வயித்துல புழு வரும்னு சொல்லு...இப்போ அதுக்கு மட்டும் வாங்க சொல்ற...நாம அவுங்க வீட்டுக்கு போகும் போது எல்லாம் மாமா எனக்கு ஆசை சாக்கலேட் தான் வாங்கி தராரு. எனக்கும் ஒன்னு அப்படியே வாங்கிக்குறேன் மா..

அடி ராஸ்கல்... பெரிய மனுஷன் மாதிரி பேசாத...நான் சின்ன புள்ளையா இருக்குறப்போ எனக்கு எல்லாம் ஆசை சாக்கலேட் கூட இல்ல...பனங்கற்கண்டும், தேன் மிட்டாயும் தான்... அவங்க போகட்டும் உனக்கு மண்டகப் படி இருக்கு. ஒழுங்க போயி சொன்னதை வாங்கிட்டு வாடா.



எல்லா பொருளையும் மூட்டை கட்டி சுமந்து வந்து வீடு வந்து சேர்ந்ததில் சரவணன் சோர்ந்து போய் இருந்தான். உள்ளே வந்து பார்த்தால் அவன் அப்பாவும், மாமாவும் அரசியல் பேசியபடி காபி குடித்துக் கொண்டிருந்தார்கள். அம்மாவும், அத்தையும் சொந்த கதைகளை பேசிக் கொண்டிருந்தார்கள். உள்ளே சென்று தண்ணி குடித்து விட்டு விளையாட போகலாம் என்று கிளம்பியவன் வெளியே வரும் போது குட்டி பாப்பா ஜெம்ஸ் சாக்கலேட்டை சப்பிசப்பி சாப்பிடுவதை கண்டு சற்று கடுப்புடன் வெளியேறினான்.



வருடம் 2004 ..

சரவணன் இப்போது பொறியியல் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தான். கல்லூரி கிளம்பும் நேரத்தில் அவனின் ஒன்று விட்ட அண்ணன் தனது குடும்பத்துடன் வந்திருந்தான்.



அம்மா பாலாஜி அண்ணன் வந்திருக்காங்க..வழக்கமான குசல விசாரிப்புகள். அம்மா சொல்வாளே என்று வெளியில் சென்று தனக்கு ஒரு ஆசை சாக்கலேட்டும், வந்திருந்த அண்ணனின் குட்டிப் பாப்பாவுக்கு 'மன்ச்' மற்றும் கிட்காட் சாக்கலேட்டும் வங்கி வந்து குழந்தையிடம் கொடுத்தான். ஒன்றும் தெரியா குழந்தை சப்பி சப்பி சாப்பிட்டுக் கொண்டிருந்தது.சரவணன், அதை ரசித்தவாறு புன்னகையுடன் கல்லூரிக்கு கிளம்பினான்.

0 ரீலு ஓடிருக்கு..:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
 
டக்கால்டி © 2010