எத்தனுக்கு எத்தன்

நான் அவனை அங்கு பார்ப்பேன் என்று நினைக்கவேயில்லை. இப்படியும் கூட நடக்குமா என்று நினைக்கவில்லை. நினைத்தால் எனக்கே சிரிப்பாகவும்,அவமானமாகவும்இருக்கிறது. ஆனால் வாழ்க்கை தான் புரியாத புதிர் ஆச்சே!

ஆம் ஒவ்வொரு வார இறுதியும் நான் வேளச்சேரியில் உள்ள எனது பள்ளித் தோழர்கள் வசிக்கும் வீட்டிற்கு செல்வது இப்போது வழக்கமாகிவிட்டது. வெள்ளி இரவு தொடங்கும் எங்கள் ஆட்டம், பாட்டம்,கொண்டாட்டம் ஞாயிறு இரவு வரை தொய்வில்லாமல் தொடரும்.
சரக்கு, கஞ்சா, போதை, இசை, சீட்டாட்டம், சிகரெட், டீ கடை பஜ்ஜி, சைட் அடித்தல், பிட்டு படம்,கலாய்த்தல், மொக்கை, தியேட்டர்,சினிமா என்று ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு தருணம், ஒவ்வொரு இன்பம்.

அந்த சனிக்கிழமையும் அவ்வாறே கடந்து போக, ஞாயிறு விடிந்தது. எழுந்ததுமே ராஜேஷ் என்னிடம் "மச்சான் என்னடா இன்னும் மப்பு இறங்கலையா? இந்தா இந்த கஞ்சாவ அப்படியே ஒரு நாலு இழு இழு... சொர்கத்துக்கு போயிடுவே" என்றான். உனக்கு சொல் புத்தியும் கிடையாது சொந்த புத்தியும் கிடையாது என்ற என் அம்மாவின் அர்ச்சனை திடீரென்று ஞாபகம் வர, உன் நண்பன் கொடுக்கும் புத்திமதியை ஏற்றுக் கொள் என்று மனசும் அறிவும் முதன்முறையாக இணைந்து கட்டளையிட்டது.

ஒரு பாக்கெட் பால்கோவா துணையுடன் ஒரு முழு சிகரெட்டில் அடைக்கப்பட்ட கஞ்சாவின் புகை என்னுள் ஆக்கிரமித்தது. நான்கு மணி நேர சிரசாசன நிலையில் கிடந்த என்னை இரண்டு மணிக்கு சோறு சாப்பிட எழுப்பினான் ஹரி. அடித்த கஞ்சாவும், நைட் அடித்த நெப்போலியனும், காலையில் உணவு உண்ணாததாலும் பசி..அகோரப்பசி!

எங்கே அன்லிமிடட் மீல்ஸ் கிடைக்கும் என்று யோசித்து பின் "களவரா ரெஸ்டாரன்ட்" செல்ல முடிவாயிற்று. அங்கு தான் அவனை சந்தித்தேன். அவன் ராகேஷ் என் கல்லூரி கால நண்பன். அவனுக்கு திருமணமாகிவிட்டதாக கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அப்போது எனக்கு சரியாக ஞாபகம் இல்லை. என் முழு கவனமும் மலையாள ஸ்டைலில் பரிமாறப்படும் சாப்பாட்டின் மேலேயே இருந்தது. அவனாகவே என்னை கண்டு கொள்ளட்டும் என்று விட்டுவிட்டேன்.

நான் நினைத்தது சரி தான்.அவன் அவனது புதுப் பொண்டாட்டியுடன் வந்திருந்தான். அவன் இங்கு வருவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. ஏனெனில் அவன் மலையாளி.ஜோடி பொருத்தம் நன்றாகவே இருந்தது. அருகிலிருந்த ஹரியிடம், "அங்க நீல கலர் சட்டைப் போட்டிருக்கானே அவன் என்கூட காலேஜ்ல படிச்சவன் டா!"என்றேன்.

அப்ப அவன் பக்கத்துல இருக்குற அந்த பிகரு?- ஹரி.

டேய்! மெதுவா பேசு டா. அது அவன் வைப் டா.-நான்

"அதைசொல்லு. சொன்னா தான தெரியும்.நீ எல்லாம் வேஸ்ட்டு டா. அவனைப் பாரு...அவனும் உன்கூட படிச்சவன் தானே, கல்யாணம் கட்டிக்கிட்டு பொண்டாட்டியோட வந்திருக்கான். ஆனா நீ இன்னமும் வெக்கமே இல்லாம சரக்கு, கஞ்சானு எங்க கூடயே சுத்திகிட்டு இருக்க" என்றதும் அனைவரும் சிரித்தார்கள்.
"போடா..அது எல்லாம் தானா நடக்கும்"  என்ற படி நான் மீண்டும் சாப்பிடுவதில் குறியானேன்.

சாப்பிட்டு முடித்து விட்டு, பில் கட்ட கெளம்பும் போது அவன் என்னை அடையாளம் கண்டுவிட்டான். பரஸ்பர விசாரிப்புகள் முடிந்தவுடன் அவன் மனைவிக்கு என்னை அறிமுகப்படுத்தினான். நானும் அரை மயக்க மப்பில் ஒரு புன்னகையை உதிர்த்தபடி இருந்தேன். உடனே அவன் மலையாளம் கலந்த தமிழில்,

"மச்சான் உந்தா போன் நம்பர் கிட்டுமோ?" என்றான்.
"கண்டிப்பா. முதல்ல உன் நம்பர் கொடு டா?" என்றேன்.
"ஓகே டா. நோட் பண்ணிக்கோ. 9356245212 " என்றான்.
"அப்படியே இந்தா நம்பருக்கு ஒரு மிஸ்ட் கால் விடு டா. நான் நோட் பண்ணிக்கிறேன்" என்றான்.
என் மொபைலில் சுத்தமாக பேலன்ஸ் இல்லை. இருந்தாலும் அவனுக்கு கால் பண்ணுவது போல இரு முறை நடித்து விட்டு, "சிக்னல் ரொம்ப வீக்கா இருக்குனு நினைக்கிறேன். நீ நோட் பண்ணிக்கோ" என்று என் நம்பரை கொடுத்து விட்டு சமாளித்தபடி அவர்களிடமிருந்து விடைபெற்றுக்கொண்டேன்.

திரும்பி வரும் வழியில், என் மனதில் ஓடியவை. "ச்சே எவ்ளோ அசிங்கமா போயிடுச்சு. தினமும் நூறு ரூவா கொடுத்து சரக்கு அடிக்கிற. மொபைல்ல கூட டாப் அப் பண்ணாம காசை சேமிச்சு வச்சு குடிக்கிற அளவுக்கு வந்துட்டயா? இதுல நான் சாப்ட்வேர் கம்பெனியில வேலை பாக்குறேன்... மாசம் 25000 சம்பளம் என்று நீ சொன்ன உண்மையை கூட அவன் நம்பியிருக்க மாட்டான். இந்நேரம் இதை அவன் மனைவியிடம் சொல்லி சிரித்துக்கொண்டிருப்பான்."

உள்ளே ராகேஷ் அவன் மனைவியிடம், "என் மொபைல்ல பேலன்ஸ் இல்லாம நான் அவனை கூப்பிட சொன்னா அவன் என்னை வாரிவிட பார்த்தான். எப்படியோ சமாளிச்சுட்டேன்" என்று சிரித்தபடி தன் மனைவியுடன் கதைத்துக் கொண்டிருந்தானாம். எனக்குப் பின்னால் வெளியே வந்த என் நண்பன்சொன்னான்.

0 ரீலு ஓடிருக்கு..:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
 
டக்கால்டி © 2010