விபத்தும்,மன நிலைமையும்…

உங்களுக்கு தெரிஞ்சவங்க லிஸ்ட்ல கல்யாணத்துக்கு ஒரு வாரம் முன்னாடி யாராவது அக்சிடேன்ட்ல அடிபட்டு ரத்தக்களரியோட கிடந்துருக்காங்களா சார்?கல்யாணம்னதும் எதோ என்னோட கல்யாணம் என்று அவசரப்பட்டு நினைச்சிடாதீங்க. நமக்கு தான் இன்னும் அந்த மாதிரி விஷயம் எதுவும் நடக்கலையே. நடக்குமா என்பதும் சந்தேகமாகவே இருக்கு?


ஆமா! கல்யாணம் என் கூட பிறந்த அண்ணனுக்கு. கூட பிறந்தா எப்படி அண்ணனாகும். நீங்க ட்வின்சா? என்றெல்லாம் கடிக்க கூடாது.

ரெண்டு வாரம் முன்னாடி ஒழுங்கா வழக்கம் போல ரூம்ல தண்ணிய போட்டு படுக்காம கொழுப்பெடுத்து போயி சரக்கடிக்காம வெளியில சாப்பிட கிளம்பினேன் சார். தோசை சாப்பிட்டுவிட்டு திரும்பி வரும் வழியில் அன்பே சிவம் ரேஞ்சுக்கு இல்லனாலும் சுமாரான அளவுக்கு விபத்து நடந்துடுச்சு.

இப்ப உங்களுக்கு புரிஞ்சுருக்குமே! விபத்துக்கு காரணம் நாய். ஆமாங்க நம்புங்க தெரு நாயே தான். இத்தனைக்கும் பார்த்துகிட்டே தான் வண்டியை செலுத்தினேன். அது கிட்ட நெருங்கும் போது சராலென முன் சக்கரத்துக்குள்ள பாஞ்சிடுச்சு. நாய் மேல வண்டி ஏறி பின் பறந்து நானும் பறந்து சிமென்ட் ரோட்டில் உருண்டு விழுந்து மூன்று சுற்று முடிக்கையில் நாய் எஸ்கேப் ஆகி ஒரு மூலையில் நின்று “இவன் இன்னுமா உயிரோட இருக்கான்?” என்ற தொனியில் பார்த்து எரிகிற புண்ணில் எண்ணையை ஊற்றியது. இரண்டு கையிலும் பலத்த காயம். சில்லறை காயம் இல்லை. ஆயிரம் ருபாய் நோட்டு காயம். இடத்து காலில் ஒரு ஆயிரம் ருபாய் நோட்டு, கை விரல்கள், உள்ளங்கை, பின் கை பகுதி என பலத்த சேதம். எங்கும் ரத்தம் எதிலும் ரத்தம். அனைத்தும் சிராய்ப்பு காயமே என்றாலும் எரிச்சலோடு சேர்ந்த வலி அதுவும் அக்னி நட்சத்திரத்தில்!

உருளும் பொழுது என்னை தடுத்து நிறுத்திய ஒருவர் மட்டும் என்னிடம் நலம் விசாரிக்க, கூடியிருந்த நால்வர் நாயை கல்லால் அடித்த படி துரத்திக் கொண்டிருந்தார்கள். “அட நாயை அடிக்கிற நாய்களா முதல்ல எனக்கொரு உதவி பண்ணுங்கடா” என்று நினைக்கையிலேயே ஒருவர் “சார் இந்த நாய்னால தினமும் ரெண்டு பேராவது விழுறாங்க. சனியன் இத அடிச்சே கொல்லனும் சார்” என்று வெறிபிடித்து துரத்தஆரம்பித்தார்.

எனக்கும் வெறி இருந்தாலும் அப்போது என்னால் ஒன்னும் செய்ய முடியலீங்க. சமாளித்து எழுந்து நின்றவுடன் கையிலும் காலிலும் ரத்தம் கொட்டத் தொடங்கியது. எனக்கு உண்மையாலுமே அன்றிரவு டவுசர் கிழிந்து விட்டது. இருட்டில் உடனேயே அது தெரிய வில்லை. ஹாஸ்பிடல் சென்றவுடன் தான் டவுசர் தாறுமாறாக கிழிந்து தொங்கிகொண்டிருப்பது தெரிந்தது. நல்ல வேலை ஜட்டி போட்டிருந்தேன். இல்லை என்றால் இருந்த கொஞ்ச நஞ்ச மானமும் கப்பலேறியிருக்கும்.

சென்னையில் உதவும் மனப்பான்மையுடன் சில பேரா என்று வியக்கும் அளவுக்கு எனக்கு தண்ணீர் கொடுத்து ஆசுவாசப் படுத்தி பின் ஒரு வேனில் என்னை ஏற்றிக்கொண்டு ஹாஸ்பிட்டலில் விட்டனர். எனது டெபிட் கார்டு மற்றும் லைசென்ஸ் மட்டும் தான் என்னிடம் இருந்தது. பாக்கெட்டில் வைத்திருந்த முன்னூற்று சொச்ச ரூபாய் எங்கே விழுந்தது என்று தெரியவில்லை.


முதலுதவி செய்து கொண்ட பின் சிகிச்சை கட்டணம் நானூறை என்னை கொண்டு சேர்த்த நண்பர் கட்டினார். பின் அவருக்கு திரும்பும் வழியில் திருப்பி செலுத்தி வண்டியை மீண்டும் நானே சமாளித்து ஒட்டிக்கொண்டு ரூம் வந்து சேர்ந்த போது மணி 11 . பிறகு தான் வீட்டுக்கே தகவல் சொன்னேன். விழுந்ததில் கைபேசி நொறுங்கியிருந்தது. டிஸ்ப்ளே காலி. குத்து மதிப்பாக வீட்டு எண்ணை அடித்ததில் சரியாக இணைப்புகிடைத்தது.

இரவு முழுவதும் தூக்கம் இல்லை. அவ்வளவு வலி. எப்போது தூங்கினேன் என்று எனக்கு நினைவில்லை.பின்னர் அடுத்த நாள் காலையில் 5 மணிக்கெல்லாம் மீண்டும் ஹாஸ்பிடல் சென்று கட்டு போட சொன்னால் மறுத்தார்கள். கட்டு போட்டால் காயம் சீக்கிரம் ஆறாது என்றார்கள். அவர்களிடம் நான் பஸ்சில் ஊருக்கு போவதால் தேவைபடுகிறது. சென்றவுடன் நீக்கி விடுவேன் என்று விளக்கிய பிறகு கட்டு போடப் பட்டது. வலியுடனும் குருட்டு தைரியம் மற்றும் வலிமையுடனும் புறப்பட்டேன் ஊருக்கு.பேருந்தில், சாலையில் என எங்கும் எண்ணை நோக்கி விசித்திர பார்வைகள். வழி நெடுகிலும் என்ன என்று கேட்பவர்களுக்கு விளக்கங்கள் என என்னை எரிச்சலடைய செய்த முதல் நாள் அது. வீட்டுக்கு சென்றால் கல்யாண அமளி துமளிகள். நிம்மதியாக உறங்க வழியே இல்லை. சரியாக கவனிக்க ஆள் இல்லை. விரக்தியின் உச்சம் சூழ்ந்த தருணங்கள். அனைவரின் மீதும் கோபம். வலி.

இதன் நடுவே திருமணத்துக்கு மீண்டும் மாயவரம் பயணம். மண்டபமே கலையாக இருக்க நான் மட்டும் பத்து நாளாக குளிக்காத அழுக்கு தேகம், தாடி சகிதமாய் ஒரு ஷார்ட்ஸ் மற்றும் பனியனுடன். இதன் நடுவே வந்து போகும் இஷ்டமித்திர பந்துகளின் விசாரிப்புகளுக்கு விளக்கவுரை. சுமார் 700 பேர் கிட்ட எப்படி விழுந்தேன்? எதனால விழுந்தேன்? சொல்ற கடுப்பு இருக்கு பாருங்க அதை அனுபவிச்சா தான் தெரியும்.


இதனால் நான் கத்துகிட்ட பாடம்:

இந்த உலகத்துல ஒருவன் தன்னை ஒழுங்காக முதல்ல பார்த்துகலைனா ரொம்ப கஷ்டம். எவனும் உதவி பண்ணுவான் நினைக்கவே கூடாது. நம்ம உடம்பை நாம தான் பத்திரமா பாத்துக்கணும். இல்லைனா என் நிலைமை தான்.

சில சுவாரசியங்கள்:

மெடிக்கல் பாரம் பில் பண்ணும் போது எனக்கு வயது 32 என்று என்னை கேட்காமல் போட்டுவிட்டார்கள். பின்னர் அவ்வளவு வலியிலும் சொல்லி அதை 26 என்று மாற்றியது.

எப்ப விழுந்தீங்க என்ற கேள்விக்கு இப்ப தான் சுட சுட விழுந்தேன் இங்க வந்திருக்கேன் என்று எம்.ஆர். ராதா சார் பாணியில நக்கல் அடிச்சது.

நான் ஊருக்கு போகும் போது மீண்டும் ஒரு நாய் பஸ்சுக்கு குறுக்கே பாய்ந்து பின்னங்கால் ஒடிந்த நிலையில் கதறி விழுந்தது.

என்ன செய்தும் ஆறாத புண் மூன்று நாள் 5 மணி நேர கேப் விட்டு விட்டு 90 கட்டிங் அடித்த பின் சீக்கிரம் ஆறியது.

ஒவ்வொருவரும் காரணம் கேட்க நான் விளக்க அவர்கள் தனது சொந்த கதையை கூற சுமார் 200 சிறுகதைகளை படித்த திருப்தி.

இது போல இந்த இரண்டு வாரத்தில் அனைத்துமே சுவாரசியங்கள். இப்போது தான் கைகளில் புண் ஆரியிருக்கிறது. தழும்புகள் மறைய ஆலிவ் ஆயில் தடவி வருகிறேன். காலில் புண்ணும் வீக்கமும் முற்றிலும் குணமாக வில்லை. இன்னும் ஒரு வாரம் ஆகும் போலிருக்கிறது.


மீண்டும் வருகிறேன்… விரைவில் மீண்டு வருகிறேன்.

0 ரீலு ஓடிருக்கு..:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
 
டக்கால்டி © 2010